×

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க; தவெக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிடில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50% கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000/-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.

பொய்க்கால் குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் 6.8.2026 அன்று தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில், அதிமுக சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். காவிரி நீரை மாநிலங்களுக்கிடையே பங்கிடுவது பற்றி உச்சநீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி கர்நாடக அரசு இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே திறந்துள்ளது. ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். ஆனால், கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை. காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) கூட்டத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது.

அதன்படி, காவிரியிலிருந்து தமிழ் நாட்டிற்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு விநாடிக்கு 3500 கன அடி வீதம் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கர்நாடக முதலமைச்சர் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். மேலும், இதுகுறித்து கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற நிலையில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள சுமார் 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதுடன், டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளிவந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சரை வலியுறுத்தி ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

ஏற்கெனவே, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும் 177.25 TMC தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்; மாத வாரியாக எவ்வளவு திறக்க வேண்டும் என்ற அளவீடும் உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று இந்த அரசை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்றுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாததோடு, மேகதாது குறித்து மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலைப் பற்றியும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தண்ணீர் திறக்கமாட்டேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சரின் கருத்து பற்றியும், எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Daveka government ,Edappadi Palanisami ,Chennai ,Secretary General ,
× RELATED காவிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக...