×

விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடு,கிடு உயர்வு: பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை: விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவிரியை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டுமே, 48 சதவீதம் நெல் உற்பத்தி நடைபெறுகிறது. அதேபோல் ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 19 சதவீதம் நெல் உற்பத்தியாகிறது. மீதமுள்ள, 33 சதவீதம் நெல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக, 53.81 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா என இரு போகங்களாக சாகுபடி நடப்பது வழக்கம் ஆகும்.

டெல்டா மாவட்​டங்​களில் விவ​சா​யிகள் குறு​வை, சம்​பா, தாளடி பரு​வங்களில் நெல் சாகுபடி மேற்​கொள்​வதற்கு 120 அடி கொள்​ளளவு கொண்ட மேட்​டூர் அணை​யில் இருந்து ஆண்​டு​தோறும் ஜூன் 12ம் தேதி நீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். அதே ​நேரம், அணை​யில் நீர் இருப்​பைப் பொறுத்து ஜூன் 12ம் தேதிக்கு முன்​பாகவோ அல்​லது கால​தாமத​மாகவோ அணை​யில் இருந்து நீர் திறந்து விடப்​படும். ஆனால் நடப்பு ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்​தாண்டு குறிப்​பிட்ட நாளில் அணை திறக்​காத​தால், டெல்டா மாவட்​டங்​களில் சுமார் 6 லட்​சம் ஏக்​கரில் செய்ய வேண்​டிய குறுவை சாகுபடி​யின் பரப்​பளவு 50 சதவீதம் குறைந்​துள்​ளது. இதனால், பம்​புசெட் பாசன வசதி கொண்ட விவ​சா​யிகள் மட்​டுமே குறுவை சாகுபடி பணி​களை மேற்​கொண்​டுள்​ளனர். அதன்​படி, டெல்டா மாவட்​டங்​களில் தற்​போது சுமார் 3 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டு, இது​வரை 1.75 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளது. அதே நேரத்தில் மின் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டு, நெற்​ப​யிர்​கள் காய்ந்து வரு​வ​தால் ஆங்​காங்கே விவ​சா​யிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட தமிழகத்தில் நெல் விளைவிக்கும் மாவட்டங்கள் அனைத்தும் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், நெல் விளைச்சல் என்பது எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கடுமையாக குறைந்துள்ளது. இதனால், அரிசி தட்டுப்பாடு என்பது நிலவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஓராண்டு அரிசி தேவை 91 லட்சம் டன்னான உள்ளது. இதில், 75 லட்சம் டன் வரை தமிழக விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதி தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலானோர் கர்நாடக பொன்னி அரிசி வகைகளை தான் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதற்காக கர்நாடகாவில் இருந்து பொன்னி அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. கர்நாடகாவில் நடப்பாண்டு விளைச்சல் என்பது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி இறக்குமதி என்பது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பை சமாளிக்க அம்மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டுப் பொன்னி ரகத்தை வாங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் லாரி வாடகை உயர்வு, உரங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் அரிசி விலை என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.55க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி ரூ.80க்கு விற்பனையாகி வருகிறது. இட்லி அரிசி ரூ.35லிருந்து ரூ.50 ஆக விலை அதிகரித்துள்ளது. இதே போல ஆர்.என்.ஆர். அரிசி ரூ. 63.50லிருந்து ரூ.71.15 ஆகவும், கோ-51 ரூ.35லிருந்து ரூ.45 ஆகவும், , குருணை ரூ.25லிருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது மளிகை பொருட்களின் விலையும் கிடு,கிடுவென உயர்வை சந்தித்துள்ளது. அதாவது குண்டு மிளகாய் ரூ.260லிருந்து ரூ.320 ஆகவும், உளுத்தம் பருப்பு ரூ.120லிருந்து ரூ.150 ஆகவும், தனியா ரூ.160லிருந்து ரூ.250, கடலைப் பருப்பு ரூ.80லிருந்து 100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும் பூண்டு ரூ.200லிருந்து ரூ.250 ஆகவும், துவரம் பருப்பு ரூ.130லிருந்து ரூ.140 ஆகவும், புளி ரூ.180லிருந்து ரு.200, சர்க்கரை ரூ.41லிருந்து ரூ.51 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது ஏழை நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. விலை அதிகரிப்பால் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க பட்ஜெட்டில் கூடுதல் பணம் ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்து்ளது. விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பதுக்கல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Chennai ,Delta districts ,Tamil Nadu ,
× RELATED தென்மேற்குப் பருவமழைப் பொழிவு,...