பள்ளிபாளையம், ஜூலை 30: பள்ளிபாளையம் காகித ஆலை காலனி மேம்பாலத்தில் நடந்த விபத்தில், பஸ் மோதி டூவீலரில் வந்த வாலிபர் பலியானார். பாலத்தில் வேகத்தடுப்புகள் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஆசைத்தம்பி(26). இவர் திருப்பூரில் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, திருச்செங்கோடு சென்று விட்டு, இரவு 8.30 மணியளவில் டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காகித ஆலை காலனி மேம்பாலத்தில் வந்த போது, ஈரோட்டில் இருந்து வந்த தனியார் பஸ், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆசைத்தம்பி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
விபத்து குறித்து அறிந்ததும், அப்பகுதி மக்கள் மேம்பாலத்தில் திரண்டு, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால், அடிக்கடி விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்பட்டு வருவதாக கூறி திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று, பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கபிலனை தொடர்பு கொண்டு போராட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த பொறியாளர், உடனடியாக பாலத்தின் இருபுறமும் வேகத்தடை, சாலை தடுப்பு, மின்விளக்குகள் அமைக்க உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
