×

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலம்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

 

சேந்தமங்கலம், ஆக.3: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி 60 ஆயிரம் பூக்களால் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியை பொன் சந்திரசேகர் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட பகுதியாகும், வல்வில் ஓரி கொடை திறனையிலும், வில் வித்தையில் சிறந்து விளங்கினார். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஆண்டு தோறும் கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா, சுற்றுலா விழாவும், மலர் கண்காட்சி தொடக்க விழா நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று நடந்த விழாவிற்கு நாமக்கல் ஆர்டிஒ சாந்தி தலைமை வகித்தார்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் காமில் அன்சர், தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன் சந்திரசேகர் கலந்துகொண்டு, வாசலூர் பட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் ரோஜா, கார்னேசன், ஜெர்பரா, லில்லியம், ஆர்கிட் போன்ற பலவகையான வண்ண மலர்களை கொண்டு ஆடு, கோழி, கன்றுகுட்டி, வண்ணத்துப்பூச்சி, நாட்டிய மங்கை, முயல், பிறை நிலா, காதல் சின்னம் ஆகியவற்றை வடிவமைத்து வத்திருந்னர். இதற்காக 60 ஆயிரம் மலர்கள் பயன்படுத்தப்பட்டது.

இதேபோல் காய்கறிகளை கொண்டு டிராகன், கழுகு மற்றும் முதலை உருவங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் சிறுதானிய பயிர்களை கொண்டு இந்திய வரைபடமும், மீனும், மருத்துவ செடிகளின் பெயர்கள் மற்றும் அதன் பயன்பாடுகளையும் பொதுமக்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பல்லுயிர் கண்காட்சி நடந்தது. இதில் ஆடு, மாடு, நாய், புறா மற்றும் பூனை உள்ளிட்டவை காட்சி படுத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, செம்மேடு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வில்வித்தை போட்டியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பின்னர், வல்வில் ஓரி அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை, சித்த மருத்துவத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, சமூகநலத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு, வல்வில் ஓரி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் கலைமாமணி பிரபு குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி தொடங்கி கிராமிய நடனம், பல்சுவை நடனங்கள், 4 அரசு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சி, 18 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற நாட்டுப்புற பாடல், கைபேசி விழிப்புணர்வு பாடல், சிலம்பாட்டம், நடனம், கிராமிய நடனம் நடைபெற்றது. முன்னதாக செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வெங்கடாசலம், வல்வில் ஓரிக்கு காலையில் முதல் மாலையை அணிவித்தார்.

பின்னர் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, தாசில்தார் கோபி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார் பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

Tags : Kolalakalam ,Valville Ori Festival ,Kollimalai ,SENTHAMANGALAM ,PON CHANDRASEKHAR ,VALVILLE ORI ,KOLLIMALA ,Namakkal district ,Kollimalai Kadieshu Vallals ,
× RELATED மல்லசமுத்திரத்தில் தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்