×

ஆலைகளுக்கு நெல் வரத்து குறைந்தது; நாமக்கல்லில் அரிசி விலை தொடர் உயர்வுகிலோவுக்கு ரூ.15 வரை அதிகரிப்பு

 

நாமக்கல், ஆக.4: அரிசி ஆலைகளுக்கு நெல் வரத்து குறைந்ததால், நாமக்கல்லில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோவிற்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. நாமக்கல் பகுதியில், 50க்கும் மேற்பட்ட அரிசி மொத்த விற்பனை மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு சின்னசேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுவயல், காங்கேயம் ஆகிய ஊர்களில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து, அரிசி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில், ஆந்திரா, தெலங் கானாவில் கோடை மழை மற்றும் பருவமழை சரிவர பெய்யாததால், நெல் சாகுபடி குறைந்தது. உற்பத்தி குறைவு மற்றும் நெல் பற்றாக்குறையால், அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ அரிசி சராசரியாக ரூ.10 வரை விலை உயர்ந்தது. தற்போது அரிசி விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது.

நாமக்கல் பகுதியில் உள்ள அரிசி மண்டிகளில், ராஜபோகம் டீலக்ஸ் பொன்னி, கிச்சடி பொன்னி, இட்லி குண்டு போன்ற ரக அரிசி அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்த அரிசி ரகங்கள், கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 26 கிலோ எடை கொண்ட அரிசி சிப்பம் ரூ.1450க்கு விற்பனையானது. தற்போது ரூ.1750க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து, நாமக்கல்லை சேர்ந்த அரிசி மண்டி உரிமையாளர் பொன்னுசாமி கூறியதாவது:டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி ஆலைகளுக்கு போதுமான நெல் வரத்து இல்லை. இதனால், அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மூட்டை விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். கடந்த மாதம் ஒரு முறையும், தற்போது ஒரு முறையும் என இரண்டு முறை அரிசி மூட்டை விலை உயர்ந்துள்ளது.

டீசல் விலை உயர்வால், லாரி போக்குவரத்து செலவும் உயர்ந்து வருகிறது. நாமக்கல் அரிசி மண்டிகளுக்கு அரிசி அனுப்பி வைக்கும், வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளில், ஒரு கிலோ அரிசி தற்போது ரூ.12 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விற்பனை செய்யப்படும் அரிசி மூட்டைகளின் விலை உயர்ந்துள்ளது. தற்போது 26 கிலோ எடை கொண்ட அரிசி சிப்பம் ரூ.1700 முதல் ரூ.1750 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு மொத்த வியாபாரத்தில் ரூ.12 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. அரிசி விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. போதுமான நெல் உற்பத்தி ஆன பின்பே, அரிசி விலை குறையும். ஆனால், இன்னும் 3 மாதங்களுக்கு அரிசி விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Namakkal ,
× RELATED மல்லசமுத்திரத்தில் தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்