உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும், பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
திருமூர்த்திநகரில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பிரதான குழாய்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் 3 பிரதான குழாய்கள் பங்களாமேடு வழியாக செல்கின்றன. குழாய்கள் செல்லும் இடத்தில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
இப்பகுதியில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன.இந்நிலையில், புதர் பகுதியில் உள்ள ஒரு குழாயை உடைத்து, தோட்டங்களுக்கு திருட்டுத்தனமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. உடைந்த பகுதியில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறினால் வெளியே தெரிந்துவிடும் என்பதால், உடைந்த பகுதியில் சாக்குப்பையை போட்டு வைத்துள்ளனர். இதனால், தண்ணீர் வெளியேறுவது வெளியே தெரியவில்லை.
ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை குறைவால் பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நூதன முறையில் தண்ணீர் திருடுவதால் பல கிராமங்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அதிகாரிகள் இதை கண்காணித்து, குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். அப்பகுதியில் உள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
