புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த ஐந்து மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்குத் தாக்கலில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும் தனிநபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியவர்கள் எண்ணிக்கை 142ஆக இருந்தது. 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் இந்த எண்ணிக்கை 301ஆகவும், 2023-24-ல் 284ஆகவும், 2024-25-ல் 415ஆகவும் இருந்தது, 2025-26ல் இது 576ஆக உயர்ந்துள்ளது.
வருமான வரிச் சட்டம், 2025 அல்லது முந்தைய வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் பில்லியனர் என்ற சொல்லுக்கு சட்டரீதியான வரையறை எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அமைச்சர், வருமான வரி கணக்குத் தாக்கல்கள் மூலம் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும் தனிநபர்களை அரசு கண்காணித்து வருவதாகவும் கூறினார். செல்வ வரிச் சட்டம் 1957, கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் ரத்து செய்யப்பட்டதால், பில்லியனர்களின் மொத்தச் சொத்து குறித்த தரவுகளை அரசு பராமரிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வின் (2023-24) படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வருமான ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பெரும் செல்வந்தர்களின் (100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள்) எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு கணிசமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
* செல்வம் ஓரிடத்தில் குவிகிறதா?
வருமானம் மற்றும் செல்வம் ஒரு சிலரிடமே குவியும் போக்கு, வருமான ஏற்றத்தாழ்வு, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசு ஏதேனும் ஆய்வு நடத்தியுள்ளதா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் சவுத்ரி, வருடாந்திர காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இரண்டிலும் தொழிலாளர் சந்தைகள் கோவிட்-க்கு முந்தைய நிலையைத் தாண்டி மீண்டு வந்துள்ளன என்று கூறினார்.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம், 2022-ல் இருந்த 3.6 சதவீதத்திலிருந்து 2025-ல் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. வருமானம் மற்றும் சொத்துக்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், பரவலான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இதில் முற்போக்கான வருமான வரி முறை மற்றும் உணவு, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான செலவினங்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்’ என்று ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்திரி கூறினார்.
