×

காமன்வெல்த் பளுதூக்குதலில் தமிழகத்தின் ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம்!

கிளாஸ்கோ: பளுதூக்குதலில் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவையும், க்ளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவையும் தூக்கி, தனது பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இதே பிரிவில் மலேசிய வீரர் பின் பிடின் (299 கிலோ) தங்கமும், பப்புவா நியூ கினியின் மொரியா (282 கிலோ) வெண்கலமும் வென்றனர்.

கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தமாக 266 கிலோ தூக்கி ஆறாம் இடம் பிடித்தார். அதன் பின்னர் காயம், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட காரணத்தால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் சர்வதேச களத்துக்கு திரும்பியாவர் தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

வெற்றி குறித்து ராஜா முத்துப்பாண்டி கூறுகையில்; தங்கம் வெல்வதற்கான திறனை நான் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, பயிற்சியின் போது செயல்பட்டதை ஒப்பிடும் போது, நான் திறம்பட செயல்படவில்லை. இருப்பினும், வெள்ளி வென்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.எனக்கு பக்கபலமாக இருந்த இந்திய விளையாட்டு ஆணையம், பளுதூக்கும் கூட்டமைப்பு மற்றும் என்னுடைய பயிற்சியாளர் விஜய் ஷர்மா ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

போட்டியின் 4வது நாள் நிறைவில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன், பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதில், வெண்கலத்தை தவிர எஞ்சிய 3 பதக்கங்களும் பளு தூக்குதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Raja Muthupandi ,Glasgow ,
× RELATED காமன்வெல்த் போட்டி 2026: மகளிர்...