- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராஜா முதுபாண்டி
- கிளாஸ்கோ
- காமன்வெல்த் விளையாட்டு
- 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
- கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து…
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் பளுதூக்குதல் 68 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ராஜா முத்துபாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆண்கள் பளுதூக்குதலில் (68 கி.) களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த முத்துபாண்டி ஸ்நேட்ச் முறையில் 126 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்தார்.
மலேசியாவின் முகமது அஸ்னில் பிடின் (299 கி.) தங்கப் பதக்கமும், பப்புவா நியூ கினியா வீரர் மோரி பாரு (282 கி.) வெண்கலமும் வென்றனர்.நடப்பு தொடரில் ராஜா முத்துபாண்டி வென்றது இந்தியாவின் 2வது வெள்ளிப் பதக்கமாகவும், மொத்தத்தில் 4வது பதக்கமாகவும் அமைந்தது. காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தேசத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள முத்துபாண்டிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
* மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் 2026 போட்டியில் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு என் பாராட்டுகள். தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி ஊக்கமளிக்கட்டும். கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* முதல்வர் விஜய் பாராட்டு: ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவு
ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 30 லட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
