×

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 பதக்கம்: பளுதூக்குதலில் ஆதிக்கம்

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் போட்டியில் 4வதுநாளான நேற்று இந்தியாவுக்கு பளு தூக்குதலில் ஒரு தங்கம் , 2 வெள்ளி பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு அசத்தலாகச் செயல்பட்டு, காமன்வெல்த் போட்டிகளில் தனது 3வது தொடர்ச்சியான தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.  ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் 28 வயதான சானம்பம் ரிஷிகாந்த சிங் மொத்தம் 264 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவுக்கு முதல் வெள்ளியைப் பெற்றுத் தந்தார்.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் ராஜா  முத்துபாண்டி   மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி (ஸ்னாட்ச் 126 கிலோ + கிளீன் & ஜெர்க் 160 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றார். குத்துச்சண்டையில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவு ரவுன்ட் 16ல்இந்தியாவின் ஜடுமணிசிங்   விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.  மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் பிரீத்தி பவார், மலாவி நாட்டின் டெபோரா எம்டெஞ்ஜேவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் ஆதித்ய பிரதாப் யாதவ், உகாண்டாவின் நுஹு பாட்டேவிடம் 3-2 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். ஆண்கள் 4×200 மீ பிரீஸ்டைல் ரிலேவில்  ஸ்ரீஹரி நடராஜ், ஆர்யன் நெஹ்ரா, அனீஷ் கௌடா மற்றும் தக்ஷன் சசிகுமார் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 7:29.84 நிமிடங்களில் இலக்கை எட்டி 6வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. லான் பவுல்ஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் ரூபா ராணி திர்கி மற்றும் பிங்கி சிங் ஜோடி  நமீபியாவிடமும் (டை-பிரேக்கரில் 3-0), அதைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் புத்துல் சோனோவால், மால்டாவின் ஷான் ஜேம்ஸிடம் தோல்வியடைந்தார்.  இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கத்துடன் 8வது இடத்தில் உள்ளது.

இன்று இந்திய போட்டிகள்
தடகளம், பாரா தடகளம்

  • மதியம் 2.30 : மகளிர் உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்று: பூஜா சிங்.
  • மதியம் 2.40 : ஆண்கள் 400 மீ தடை ஓட்டம் (சுற்று 1): யஷாஸ் பாலகிருஷ்ணா, சந்தோஷ் தமிழரசன்
  • மதியம் 2.40 : ஆண்கள் 100 மீ ஓட்டம் (சுற்று 1): குருவிந்தர் சிங்
  • மாலை 3.00 : ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று (குழு ஏ): முரளி சங்கர்
  • மாலை 4.20 : ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று (குழு பி): லோகேஷ் சத்யநாதன்
  • மாலை 4.30 : ஆண்கள் 110 மீ தடை ஓட்டம் (சுற்று 1): தேஜஸ் ஷிர்சே
  • இரவு 11.35 : மகளிர் குண்டு எறிதல் F57 இறுதிப்போட்டி: ஷர்மிளா தன்கர், ஷில்பா கே. ஷைலா.
  • இரவு 11.40 : ஆண்கள் உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டி: தேஜஸ்வின் சங்கர், சர்வேஷ் குஷாரே, ஆதர்ஷ் ராம்.
  • நள்ளிரவு 1.57 : ஆண்கள் T38 100 மீ இறுதிப்போட்டி : ராகேஷ்பாய் பட், ஸ்ரேயான்ஷ் திரிவேதி.

பளுதூக்குதல்

  • மாலை 5.30 : மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி: ஞானேஸ்வரி யாதவ்.
  • இரவு 8.00 : மகளிர் 58 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி: பிந்த்யாராணி தேவி.
  • நள்ளிரவு 12.30 : ஆண்கள் 79 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி: வி. அஜய் பாபு.

குத்துச்சண்டை

  • மாலை 4.45 : ஆண்கள் 60 கிலோ பிரிவு (ரவுன்ட் 16): சச்சின் சிவாச் vs வில்லியம் ஹெவிட் (இங்கிலாந்து).
  • மாலை 6.00 : ஆண்கள் 80 கிலோ பிரிவு: அங்குஷ் vs ஜலான் ஜான் (ஆண்டிகுவா).
  • இரவு 10.30 : மகளிர் 51 கிலோ பிரிவு: சாக்ஷி சவுத்ரி vs லெதாபோ மொடுகானேல் (போட்ஸ்வானா).
  • நள்ளிரவு 1.00 : ஆண்கள் 70 கிலோ பிரிவு: சுமித் குந்து vs ஜான் மெக்கானெல் (அயர்லாந்து)

அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு தான்: தங்கமங்கை மீராபாய் பேட்டி
காமன்வெல்த் பளுதூக்குதலில் மணிப்பூரைச் சேர்ந்த 31 வயதான மீராபாய் சானு, ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ எடை பிரிவில் மொத்தம் 190 கிலோ தூக்கி தங்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர் தூக்கிய 85 கிலோ எடையானது, புதிய காமன்வெல்த்  சாதனையாகும். வெள்ளி வென்ற வீராங்கனைக்கும் மீராபாய்க்கும் 22 கிலோ வித்தியாசமாகும்.

வெற்றிக்கு பின் அவர் கூறியதாவது: 48 கிலோ எடைப் பிரிவில் நீடிப்பதற்காக கடந்த சில நாட்களாக நான் உணவேதும் உட்கொள்ளவில்லை. 48 கிலோ எடை பிரிவை பராமரிப்பதுதான் எனக்கு மிகக் கடினமான போராட்டமாக இருந்தது. தங்கப் பதக்கத்தை வென்றது  மட்டற்ற மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த நிலையை அடைவதற்கு நான் பல தியாகங்களைச் செய்துள்ளேன். ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது பயிற்சியாளர் எனக்கு வழங்கிய உத்திகளைச் சரியாகச் செய்து முடிப்பதில் மட்டுமே என் முழுக் கவனமும் இருந்தது. வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தைக் கொண்டு, எனது அடுத்த முழுக் கவனத்தையும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மீது செலுத்த உள்ளேன், என்றார்.

Tags : India ,Commonwealth ,Glasgow ,23rd Commonwealth Games ,Glasgow, Scotland ,Mirabai Chanu ,
× RELATED காமன்வெல்த் போட்டி 2026: மகளிர்...