×

கர்நாடகாவில் அதிகாரப்பூர்வ பயணம் முதல்வர் அலுவலகமே வெளியிடும்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

திருச்சி: தமிழ்நாடு முதல்வரின் கர்நாடக பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அலுவலகமே வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். திருச்சி சட்ட கல்லூரி 3வது பட்டமளிப்பு விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான நிர்மல்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி: தவெக நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது. மாணவர் போராட்டங்களில் தவெகவினர் பங்கேற்றாலும் கட்சிக்கொடி, பேனர் அல்லது எந்த அரசியல் அடையாளங்களையும் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு வருகிறார். அதேபோல் சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வது சரியாக இருக்கும். தமிழ்நாடு முதல்வரின் கர்நாடக பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அலுவலகமே வெளியிடும். பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவது குறித்து சொல்ல வேண்டுமானால் மக்களுக்காக நீண்ட காலம் போராடிய மூத்த தலைவர். அவரது தனிப்பட்ட முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* இஸ்லாமிய கைதிகள் விடுதலை எப்போது?
‘‘நீண்டகாலமாக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுகுறித்த சட்ட நடைமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

* அரசு பஸ்சுக்கு தவெக கலரா?
தவெக கட்சி நிறத்தில் சென்னை மாநகர பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளதே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘தவெக கட்சி நிறத்தில் பஸ்களை இயக்கும் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்தி வருகிறது’’ என்று நிர்மல்குமார் தெரிவித்தார்.

* திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி?
அமைச்சர் நிர்மல்குமாரிடம், திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க போகிறார்கள் என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, ஊரில் சீட்டாட்ட கிளப் ஒன்று இருக்கும். அங்கு வரும் செல்வந்தர்கள், சீட்டு விளையாட்டுக்கு இடையில் ‘டீ’ அருந்துவார்கள். அப்போது, பொழுது போக்கிற்காக இது போன்று ஏதாவது பேசிவிட்டு செல்வார்கள். அதுபோன்று தான் ஆர்.பி. உதயகுமார் பேசி வருகிறார் என்று பதில் அளித்தார்.

Tags : Karnataka ,Chief Minister ,Minister ,Nirmal Kumar ,Trichy ,Tamil Nadu ,convocation ceremony ,Trichy Law College ,Jamal Mohammed College ,Tamil Nadu… ,
× RELATED மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே...