வாய்ப்புக்காகத் தயாராக இருங்கள்

ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு விவசாயிகள் வாழ்ந்து வந்தனர். இருவரிடமும் நிலம் இருந்தது. இருவருக்கும் விளைச்சல் பெருக வேண்டும், குடும்பம் செழிக்க வேண்டும் என்ற ஒரே கனவு இருந்தது. ஆனால், அவர்கள் வாழ்வை அணுகிய விதம் முற்றிலும் வேறுபட்டது.
முதல் விவசாயி ஒவ்வொருநாள் காலையும் வீட்டின் வாசலில் நின்று வானத்தைப் பார்ப்பார். மேகங்கள் திரண்டிருந்தால் மகிழ்ச்சி கொள்வார். வெயில் அடித்தால் சோர்வடைவார். “மழை வந்தால் வேலை செய்வேன்… இல்லையென்றால் நான் உழைத்து என்ன பயன்?” என்று கூறி அன்றைய நாளை வீணாகக் கழித்து விடுவார். அவருடைய நம்பிக்கை முழுவதும் இந்த சூழ்நிலையில்தான் இருந்தது.
இரண்டாவது விவசாயி வேறுபட்டவர். அவர் வானத்தை விட தனது கடமையைப் பார்த்தார். மழை வந்தாலும், வராவிட்டாலும், “நான் செய்ய வேண்டியதை நான் செய்வேன்” என்று தினமும் வயலுக்குச் சென்று நிலத்தை உழுதார். களைகளை அகற்றினார். விதைகளை விதைத்தார். தன்னால் முடிந்த அனைத்தையும் முன்கூட்டியே செய்துவைத்தார். “மழையை என்னால் வரவழைக்க முடியாது; ஆனால், மழை வந்தபோது என் நிலம் தயாராக இருக்க வேண்டும்” என்பதே அவரது எண்ணம்.
சில நாட்களில் அந்தப் பகுதியை கடும் வறட்சி தாக்கியது. வானம் வெறுமையாக இருந்தது. முதல் விவசாயி கைகளை உயர்த்தி, “இயற்கையே உதவவில்லை. என்ன செய்வது?” என்று புலம்பினார்.
அப்போது இரண்டாவது விவசாயி அமைதியாகப் புன்னகைத்து, “விளைச்சலுக்கு மழை தேவை என்பது உண்மை. ஆனால், உழைக்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன். மீதியை இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன்” என்றார்.
சில வாரங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக ஒரு நல்ல மழை பெய்தது. தயாராக இருந்த நிலத்தில் விதைகள் உடனே முளைத்தன. சில நாட்களிலேயே அந்த வயல் பசுமையாகக் காட்சியளித்தது. ஆனால், உழைக்கப்படாத நிலம் மழை பெய்தும் வெறிச்சோடியே இருந்தது. மழை இருவருக்கும் ஒரே அளவில்தான் பெய்தது. ஆனால், அதற்காக முன்கூட்டியே தயாராக இருந்தவருக்கே அதன் பலன் கிடைத்தது.
அந்த நாளில் கிராம மக்கள் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். வாய்ப்பு அனைவருக்கும் வரும்; ஆனால் தயாராக இருப்பவர்களே அதைப் பயனுள்ளதாக்க முடியும்.
இறைமக்களே, ‘‘சுறுசுறுப்பானவனுடைய கை செல்வத்தை உண்டாக்கும்.” (நீதி.10:4) என்றும் ‘‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்” (பிரசங்கி 9:10) என்றும் இறைவேதம் எச்சரிக்கிறது.
‘‘சூழ்நிலை மனிதனை உயர்த்துவதில்லை; தயார்நிலையே மனிதனை உயர்த்துகிறது. வாய்ப்பு என்பது கதவைத் தட்டும் விருந்தினர்; ஆனால் உழைப்பு மட்டுமே அந்தக் கதவைத் திறக்கும் சாவி.” என்பதுதான் இறைவசனங்கள் கூறும் கூரிய கருத்தாகும். ‘‘வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் பலர் இருப்பினும், வாய்ப்புக்காக தயாராக இருப்பவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என்கிறது இறைவேதம்”.
– அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.

Related Stories: