அசுரர்களுக்கு ஏன் அமுதம் கிடைக்கவில்லை?

பகுதி -6

ஒரு காலத்தில் தேவர்கள் தங்கள் வலிமையையும், ஒளியையும் இழந்தனர். அதற்குக் காரணம், முனிவரான துர்வாசரின் சாபம். அவர்களின் செல்வமும், வீரியமும் குறைந்து, அசுரர்களிடம் தோல்வி அடையத் தொடங்கினர். கவலையடைந்த தேவர்கள் அனைவரும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை சரணடைந்தனர்.

பெருமாள் ஒருவழியைக் கூறினார்

“அமிர்தம் கிடைத்தால் மீண்டும் உங்கள் சக்தி திரும்பும். அதற்குப் பாற்கடலைக் கடைய வேண்டும். ஆனால், தேவர்களால் மட்டும் அது முடியாது. அசுரர்களையும் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். அமிர்தம் கிடைத்ததும் அதை நான்உங்களுக்கே கிடைக்கச் செய்வேன்” என்று கூறினார்.

பெருமாளின் அறிவுரைப்படி, தேவர்களும் அசுரர்களும் தற்காலிகமாக சமாதானம் செய்துகொண்டனர்.மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் பயன்படுத்த முடிவுசெய்தனர். ஆனால், மந்தர மலை மிகப் பெரியது. அதை யாராலும் தூக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணுவே அதை எளிதாகத் தூக்கி பாற்கடலின் நடுவில் வைத்தார்.

கடைதல் தொடங்கியவுடன் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. மலை கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது. உடனே ஸ்ரீ மஹாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து, பெரிய ஆமையாகக் கடலுக்குள் படுத்தார். அவரது முதுகின் மீது மந்தர மலை நிலையாக நின்றது. அதன் பிறகே கடைதல் தொடர்ந்து நடைபெற்றது.மலை கீழே மூழ்காமல் இருந்தாலும், கடையும்போது அது வலது, இடது என்று சாய்ந்து விழும் அபாயமும் இருந்தது. அப்போது மகாவிஷ்ணு யாராலும் காண முடியாத மற்றொரு தெய்வீக உருவத்தை ஏற்று, மலையின் உச்சியைத் தாங்கிக் கொண்டார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. அதனால் மலை அசையாமல் நின்று, கடைதல் தொடர்ந்து நடைபெற்றது.

இன்னும் ஒரு சிக்கல் இருந்தது

வாசுகி என்ற பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இத்தனை பெரிய மலையைக் கயிறாக இழுக்கும்போது, அந்தப் பாம்பிற்கே அந்தப் பாரத்தைத் தாங்கும் சக்தி வேண்டுமே! அதற்காக மகாவிஷ்ணு வாசுகியின் உடலுக்குள்ளும் அந்தர்யாமியாகப் புகுந்து, அதற்குத் தேவையான பலத்தை அளித்தார்.
அதுமட்டுமல்ல ஒருபுறம் அசுரர்கள். இயற்கையிலேயே அதிக உடல் வலிமை கொண்டவர்கள். மறுபுறம் தேவர்கள். அவர்களுக்கு அவ்வளவு பலம் இல்லை. இவ்வாறு இருந்தால் கடைதல் சமமாக நடைபெறாது.

அதனால்தான் மகாவிஷ்ணு தேவர்களின் உடலிலும் அந்தர்யாமியாகப் புகுந்து, அவர்களுக்கும் தேவையான வலிமையை அளித்தார். வெளியில் பார்த்தால் தேவர்களே மலையைக் கடைவது போல் தெரிந்தது. ஆனால் உண்மையில் அவர்களுக்குள் இருந்து செயல்பட்டது பகவானின் சக்தியே.இவ்வாறு ஒரே நேரத்தில் பல வடிவங்களில் இருந்து, மலையின் அடியைத் தாங்கி, உச்சியை நிலைநிறுத்தி, வாசுகிக்குப் பலம் கொடுத்து, தேவர்களுக்கும் சக்தி அளித்து, பாற்கடல் கடைதல் என்ற மாபெரும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறச் செய்தார் ஸ்ரீ மஹாவிஷ்ணு.

அதனால்தான் வைணவ சம்பிரதாயம், “எல்லாவற்றையும் இயக்குபவன் இறைவன்; நாம் வெறும் கருவிகள் மட்டுமே” என்ற உயர்ந்த தத்துவத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக்காட்டுகிறது.
தேவர்கள் வாசுகியின் வால் பகுதியைப் பிடித்தனர். அசுரர்கள் அதன் தலைப்பகுதியைப் பிடித்தனர். இழுத்து இழுத்து பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். வாசுகியின் வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பும் புகையும் தலைப்பகுதியில் நின்ற அசுரர்களையே அதிகமாகத் தாக்கியது.

நீண்ட நேரம் கடைந்தபோது முதலில் வெளிப்பட்டது கொடிய ஆலகால விஷம். அதன் வெப்பத்தால் மூவுலகமும் நடுங்கியது. அதை யாராலும் தொட முடியவில்லை. அப்போது உலக நலனுக்காக பரமசிவன் அந்த விஷத்தை அருந்தினார். பார்வதி தேவி அவரது கழுத்தைப் பிடித்ததால், அந்த விஷம் தொண்டையிலேயே நின்றது. அதனால் சிவபெருமானுக்கு “நீலகண்டன்” என்ற திருநாமம் ஏற்பட்டது.

அதன்பிறகு ஒவ்வொன்றாக பல தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டன. காமதேனு, உச்சைஶ்ரவஸ் என்ற வெண்குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை, கற்பக விருட்சம், அப்சரஸ் பெண்கள், கௌஸ்துப மணி, வாருணி தேவி, சந்திரன் போன்ற பல அரிய பொருட்களும் தெய்வீக செல்வங்களும் தோன்றின.இறுதியில், தாமரை மலரிலிருந்து எழுந்தருளியதுபோல், எல்லா மங்களங் களுக்கும் ஆதாரமான ஸ்ரீ மஹாலட்சுமி தேவி வெளிப்பட்டாள். தேவர்களும் முனிவர்களும் அவளைப் போற்றி வணங்கினர். பின்னர், மகாலட்சுமி தன் கரத்தில் தாமரையை ஏந்தி, மகாவிஷ்ணுவையே தனது நாயகனாகத் தேர்ந்தெடுத்து, அவரது திருமார்பில் நித்திய வாசம் செய்தாள். அதனால் மகாவிஷ்ணுவின் மார்பு “ஸ்ரீ வத்சம்” என்ற பெருமையைப் பெற்றது.

இறுதியாக, மருத்துவத்தின் அதிதேவதையான தன்வந்திரி பகவான், தனது கையில் அமிர்தக் கலசத்துடன் தோன்றினார்.அமிர்தக் கலசத்தைப் பார்த்தவுடன் அசுரர்கள் அதைப் பறித்துக் கொண்டு ஓடினர். “நாம்தான் அதிகமாக உழைத்தோம்; எனவே அமிர்தம் எங்களுக்கே சொந்தம்” என்று வாதிட்டனர். தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

அப்போது மகாவிஷ்ணு, ஒப்பற்ற அழகுடைய மோகினி வடிவம் எடுத்தார். அந்த அழகில் மயங்கிய அசுரர்கள், “அமிர்தத்தை நீங்களே அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுங்கள்” என்று மோகினியிடம்ஒப்படைத்தனர்.மோகினி தேவர்களையும் அசுரர்களையும் தனித்தனியாக அமர வைத்தார். முதலில் தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை வழங்க ஆரம்பித்தார். மயக்கத்தில் இருந்த அசுரர்கள் இதை உணரவே இல்லை.

ஆனால், இராகு என்ற அசுரன் தேவர் வேடம் பூண்டு, சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையில் அமர்ந்து அமிர்தம் அருந்தத் தொடங்கினான். இதைக் கவனித்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் தெரிவித்தனர். உடனே மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் அவனது தலையை வெட்டினார். அமிர்தம் தொண்டைக்குள் சென்றிருந்ததால், தலைப் பகுதி இராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அழியாமல் நிலைத்தன.இவ்வாறு, மகாவிஷ்ணுவின் தெய்வீகத் திட்டத்தின்படி தேவர்கள் அமிர்தம் பெற்று மீண்டும் வலிமை அடைந்தனர்.

அசுரர்கள் ஏமாற்றமடைந்து வெறுங்கையுடன் திரும்பினர். இங்குதான் நாம் சற்றுநின்று சிந்திக்க வேண்டும் பாற்கடல் கடைந்த வரலாற்றை வெறும் கதையாகப் படித்தால், ஒரு கேள்வி இயல்பாகவே மனதில் எழும்.தேவர்களும் அசுரர்களும் சேர்ந்துதானே பாற்கடலைக் கடைந்தார்கள்? இருவரும் சமமாக உழைத்தார்கள். அப்படியிருக்க, அமுதம் கிடைத்தபோது ஏன் அது தேவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது? அசுரர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?

இது நியாயமா? அதுமட்டுமல்ல பாற்கடலைக் கடைந்தபோது விஷமும் வெளிப்பட்டது. அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். பின்னர் வெளிப்பட்ட காமதேனு, கற்பக விருட்சம், அமுதம் போன்ற மங்களகரமான பொருட்கள் தேவர்களுக்குச் சென்றன.இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் விஷ்ணு புராணம் மிகவும் சுவாரஸ்யமாகக் கூறுகிறது. கதையாகப் படிக்கும்போது எந்தச் சந்தேகமும் வராது. ஆனால் சற்று தர்க்க ரீதியாக யோசித்தால், இந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழும்.

“உழைத்தது இருவரும். பலன் பெற்றது ஒருவரா? அசுரர்களுக்கு ஏன் அமுதம் கிடைக்கவில்லை? இறைவன் அவர்களை ஏமாற்றினாரா?”
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கதையை மட்டும் கூறிவிட்டால், இறைவன் பாரபட்சம் காட்டியதாகவே தோன்றும்.ஆனால் உண்மை அப்படியல்ல இதற்கான விடை, ‘தேவர்கள்’ யார்? ‘அசுரர்கள்’ யார்? என்ற தத்துவத்தைப்புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது.

தேவர்கள், அசுரர்கள் என்பதை இரண்டு இனங்களாக மட்டும் பார்த்தால் இந்தக் கதை நியாயமாகத் தோன்றாது. அவர்கள் எதைக் குறிக்கிறார்கள்? அவர்களுடைய மனநிலை என்ன? அவர்களுடைய குணங்கள் என்ன? ஏன் ஒருவர் ‘தேவர்’ என்றும் மற்றொருவர் ‘அசுரர்’ என்றும் அழைக்கப் படுகிறார்கள்? என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தத் தத்துவத்தைப் புரிந்துகொண்ட பிறகுதான், பாற்கடல் கடைந்த வரலாற்றில் இறைவன் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்பது தெளிவாக விளங்கும். இல்லையென்றால், கதையை மட்டும் வைத்துக்கொண்டு நியாயம், அநியாயம் என்று பேசினால், தவறான முடிவுக்குத்தான்வந்து விடுவோம்.

தேவர்கள், அசுரர்கள் என்று புராணங்கள் கூறும்போது, அதை இரண்டு இனங்களாக மட்டும் பார்க்கக் கூடாது.வானவர்கள், தானவர்கள், தேவர்கள், அசுரர்கள் என்று கூறப்படுபவை இரண்டு பிம்பங்கள். அவை சில நேரங்களில் தனித்தனியாகவும் செயல் படுகின்றன; சில நேரங்களில் ஒன்றுக்குள் ஒன்றாகவும்இருக்கின்றன.புராண காலத்திலிருந்து இன்று வரை இந்த இரண்டு சக்திகளும் இல் லாமல்லகம் இருந்ததே இல்லை. இனிமேலும்இருக்கப் போவதில்லை.

இதைப் புரிந்துகொள்ளஒரு எளிய உதாரணம் போதும் நமது உடலில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் சில நமக்கு நன்மை செய்கின்றன; சில நோயை உண்டாக்குகின்றன. “என் உடலில் நோய்க்கிருமிகளே இருக்கக் கூடாது” என்று சொல்வது நடைமுறைக்கு ஒத்துவராது. அவை இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது.நோய்க் கிருமிகள் அளவுக்கு மீறிபெருகும் போதுதான் உடல் பாதிக்கப்படுகிறது. காய்ச்சல் வருகிறது. பலவீனம் ஏற்படு கிறது. உடல் சோர்ந்து போகிறது.அந்த நேரத்தில் இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி விழித் தெழுகிறது. நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. அந்தப் போராட்டம் முடிந்த பிறகுதான் உடல் மீண்டும் இயல்பு நிலைக்குத்திரும்புகிறது.

அதுவரை உடல் சில சிரமங்களை அனுபவிக்க வேண்டியதுதான்

இதே தத்துவத்தைத்தான் புராணங்கள் தேவர்களும் அசுரர்களும் என்ற உரு வகத்தின் மூலம் நமக்குக் கற்பிக்கின்றன.அசுர சக்தி என்பது அழிக்கும், தன்னலத்தை வளர்க்கும், தர்மத்தை மீறும்குணங்களின் வெளிப்பாடு. தேவ சக்தி என்பது காக்கும், ஒழுங்குபடுத்தும், தர்மத்தை நிலைநாட்டும் சக்தி. இந்த இரண்டும் உலகிலும் இருக்கின்றன; நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இருக்கின்றன.

எப்போது அசுர குணங்கள் அளவுக்கு மீறி தலைதூக்குகின்றனவோ, அப்போது அவற்றை அடக்குவதற்காக தேவ சக்தி எழுகிறது. அதுதான் இறைவனின் அவதாரமாகவோ, மகான்களின் தோற்றமாகவோ, அல்லது மனிதர்களின் நல்லுணர்வாகவோ வெளிப்படுகிறது.

இப்போது இன்னொருமுக்கியமான கேள்வி எழுகிறது “தேவர்களால் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாதா? ஏன் அசுரர் களையும் சேர்த்துக்கொள்ளும்படி பகவான் கூறினார்? அப்படிச் சேர்த்துக் கொண்ட பிறகு, ஏன் அமுதத்தை அவர்களுக்குக் கொடுக்கவில்லை?”

இதற்குப் பின்னால் ஒருஆழமான தத்துவம் இருக்கிறது

ஒரு சுவாரசியமான உதாரணத்தைப் பாருங்கள்.உலகத்தில் விஷம் இருக்கிறது. அதே உலகத்தில் விஷமுறிவு மருந்தும் இருக்கிறது. இன்னும் வியப்பான விஷயம் என்னவென்றால், பல விஷ முறிவு மருந்துகள் அந்த விஷத்தையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. விஷத்திலிருந்து எடுக்கப்பட்ட மருந்தே, மீண்டும் அந்த விஷத்தின் வீரியத்தை அடக்குகிறது.அதாவது, ஒரு தீமையை கட்டுப்படுத்த, சில நேரங்களில் அந்தத் தீமையின் சக்தியையே பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பாற்கடல் கடைதலும் இதேதத்துவத்தைக் காட்டுகிறது

அசுரர்களின் பலம் தேவைப்பட்டது. அந்த வலிமை இல்லாமல் அந்த மாபெரும் செயல் நடைபெற முடியாது. அதனால்தான் பகவான் அவர்களையும் இணைத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், ஒரு சக்தியைப் பயன்படுத்துவது வேறு; அந்த சக்தி உலகையே ஆள அனுமதிப்பது வேறு.மருத்துவர் விஷத்திலிருந்து மருந்தைத் தயாரிக்கிறார். அதற்காக விஷத்தையே உணவாகக் கொடுப்பதில்லை. அதுபோல, அசுரர்களின் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த ஆற்றல் அமரத்துவம் பெற்றுஉலகத்தை ஆளுவதற்கு பகவான் அனுமதிக் கவில்லை.

இங்கே இன்னொரு நுட்பத்தையும் கவனிக்க வேண்டும் விஷ முறிவு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், உலகத்தில் உள்ள எல்லா விஷப்பாம்புகளும் மறைந்துவிடவில்லை. விஷமும் இருக்கிறது; அதற்கான மருந்தும் இருக்கிறது. ஆனால் மருந்து இருக்கும் வரை, விஷத்தைப் பற்றிய அச்சம் குறைகிறது.அதேபோல, உலகத்தில் அசுர சக்திகள் முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை. அவை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவை எல்லை மீறும்போதெல்லாம், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தேவ சக்தி யையும் இறைவன் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். இதுதான் பாற்கடல் கடைந்த வரலாறு நமக்குச் சொல்லும் ஆழமானஉண்மைகளில் ஒன்று.

முனைவர் ஸ்ரீ ராம்

Related Stories: