×

திருவண்ணாமலையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை

*பெண் உட்பட 6 பேர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, திருவண்ணாமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை புதுத்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் இரண்டு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு சிறு பொட்டலங்களாக்கி, செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் சம்பந்தப்பட்ட நபர்கள் இருக்கும் இடத்திற்கு பைக்கில் நேரில் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக புது தெரு பகுதியை சேர்ந்த விஜயன் அவரது மனைவி சாந்தி, மகன் பரணி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு சில்லறை விற்பனைக்கு கஞ்சா வாங்கிய நபர்கள், கஞ்சா வாங்கி பயன்படுத்தியவர்கள் ஆகியோரின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

எனவே, திருவண்ணாமலையில் சங்கிலி தொடராக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலும் சிலர் அடுத்த அடுத்த நாட்களில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tiruvannamalai ,
× RELATED சேலத்தில் பெண்கள் பலரை ஆபாச படம்...