சென்னை: சட்டப்பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17வது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் ஆகஸ்ட் 5ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 181/1கீழ் 2026-27ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை ஆகஸ்ட் 5ம் தேதி பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் நாள் குறித்துள்ளார். மேலும், அன்று காலை 10 மணிக்கு 2026-27ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். அடுத்த நாள் (6ம் தேதி) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அன்றைய தினம் பிற்பகல் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.
அதில் எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து, மானிய கோரிக்கை கூட்டமும் நடைபெறும். தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே என்ன நடைமுறையை கடைபிடித்து வந்தோமோ அதே நடைமுறை தான் தொடரும். அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். வாக்களித்த வாக்காள பெருமக்களும், வாக்களிக்காதவர்களும் கூட இன்றைக்கு வியந்து போற்றி பாராட்டுகிற அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும். பொதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு விவாதத்தில் கலந்துகொண்டு, தங்களின் கருத்துகளை சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோன்று மாற்றுக்கருத்து சொல்லப்படுகின்ற போது அமைதியாக இருந்து அதை கேட்டு விவாதத்துக்கு பதில் சொல்லும் கடமை ஆளுங்கட்சிக்கும் இருக்கிறது, எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. அந்த வகையில் இந்த முறையும் சபை அமைதியாக நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கின்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பு எங்களுக்கு வந்திருக்கிறது. அதை செய்திக்குறிப்பாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க இருக்கின்றோம். பேரவை தலைவரை கேட்டுவிட்டு தான் கைது செய்ய வேண்டும் என்ற விதி இல்லை. இதுபற்றி விளக்கமாக சொல்வது அவருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அது தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பேரவைக்கு வெளியே நடக்கிற நிகழ்வுகளில் சட்டமன்ற பேரவை தலைவர் எப்படி ஈடுபடலாம் என்றால், பேரவையின் அமைப்பு எல்லைக்குள் நீதிமன்ற கட்டளைகளை உறுப்பினர்கள் சேர்ப்பித்தலும் கைது செய்தலும். 291, 292வது விதியில், பேரவை தலைவரின் முன் அனுமதி இன்றி எவரையும் பேரவையின் அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதேபோன்று உரிமையியல் அல்லது குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ அல்லது அறிவிப்பையோ பேரவை தலைவரின் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது.
வெளியில் நடக்கும் சம்பவங்களில், விதிப்படி ஒரு உறுப்பினரை கைது செய்யும்போது எனக்கு தகவல் தெரிவித்தால் போதும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து விளக்கம் அளித்து என்னிடம் கொடுத்த பதில், அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக குழு தலைவர், கொறடா யார் என்பது சட்டப்பேரவை கூடும்போது அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெக தேர்தல் அறிக்கையில், ‘‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்படும். திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்” என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஏற்கனவே, தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதால் பட்ஜெட் தாக்கல் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சட்டப்பேரவை கதவை பூட்ட வேண்டும் என்ற முதல்வரின் பேச்சுக்கு சபாநாயகர் விளக்கம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியது மக்களிடம் பெரிய வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஊடகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். நியாய உணர்வு உள்ள யாரும் இதை சரியென்று சொல்ல மாட்டார்கள். இருந்தாலும் பேரவை தலைவரை பொறுத்தவரைக்கும், எனது கவனத்திற்கு இந்த பிரச்னை கொண்டு வரப்படுமானால் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நிச்சயமாக முடிவு எடுப்பேன். என்னிடம் எழுத்து மூலம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.
கரூரில் முதல்வர் பேசும்போது, சட்டமன்ற கதவுகளை மூடிவிட்டுதான் பேச வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது சட்டமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான கருத்து என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதாக கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் பேசும்போது வரிக்கு வரி விளக்கம் கேட்கக்கூடாது. அதாவது, ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதற்கு பதில் கிடைக்கும் வரை காத்திராமல் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவது பொதுவாக யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
அந்த வகையில் உறுப்பினர்கள் இருந்து பதில் சொல்வதை கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பொதுவாக முதல்வர் கதவை பூட்ட சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ள கூடாது. குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் சொல்கிறார் என்பதே தவிர, கதவை பூட்ட வேண்டும் என்பது அல்ல, இருந்து பதிலை கேளுங்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதல்வர் கையால் செய்கை செய்ததில் எந்த தவறும் இல்லை, விதிகளுக்கு உட்பட்டுதான் நடத்திருக்கிறது. மற்ற உறுப்பினர்களும் என்ன செய்கை செய்யப்போகிறார் என்று தெரிந்தால் அனுமதி அளிப்பேன். முதல்வர் என்ன செய்கை செய்யப்போகிறார் என்பதை தெரிந்துகொண்டு தான் அனுமதி அளித்தேன் என்று சபாநாயகர் கூறினார்.
* வெளியிடும் தேதியில் குழப்பம்
தமிழக அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்து ‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செய்திக்குறிப்பு’ தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தலைமை செயலகம், சென்னை-9 என்று குறிப்பிட்டு, வெளியிடும் தேதி 21-8-2026 என்று இருந்தது. வெளியிடும் தேதி 21-7-2026 என்று குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் மாதத்தை குறிப்பிட்டு அதில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தமிழக பட்ஜெட் குறித்து நேற்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமை செயலகத்தில் பேட்டி அளிப்பதாக பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஒரு சில அரசு ஆதரவு தொலைக்காட்சிக்கு மட்டுமே வாய்மொழி தகவல் கூறப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் பேட்டி குறித்து முன்கூட்டியே, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கென்று உள்ள வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்வது வழக்கம்.
ஆனால், செய்தி மக்கள் தொடர்பு பிரிவு கொஞ்ச நாட்களாக வழக்கமான நடைமுறைகளை பின்பற்றாமல் தவெக ஐடி விங்க் போல செயல்பட்டு வருவது பத்திரிகையாளர்களிடம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நேற்று சபாநாயகர் பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள் பலரும் பங்கேற்க முடியாமல் போனது. இதுபற்றி பத்திரிகையாளர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.
