×

இது முதல்வர் விஜய் ஆட்சினு சொல்லியும் விவசாயிகளிடம் லஞ்சம்.! இதான் உங்க வெளிப்படையான ஆட்சியா? டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதுமுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறியவண்ணம் உள்ளனர். யாரவது லஞ்சம் கேட்டால் இது உங்கள் முதல்வர் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் சமீபத்தில் கரூரில் விஜய் பேசினார்.

ஆனால் லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய் ஆட்சி என்று சொன்ன பிறகும் அதை கண்டுகொள்ளாமல் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதை தடுக்க வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்முதல் என்ற பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, “தூற்றுகிறோம்” என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் லஞ்சம் வழங்க மறுத்தால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, விவசாயிகள் மீதான தவெக அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.

“லஞ்சம் கேட்டால், ‘இது முதலமைச்சர் விஜய் ஆட்சி’ என்று கூறுங்கள்” என முதலமைச்சர் திரு. விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, “நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது” என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் திரு. விஜய் கூறிய ‘வெளிப்படையான ஆட்சி’ என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புவதாக தினகரன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவெக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Chief Minister ,Vijay Adshinu ,DTV Dinakaran ,Chennai ,Tamil Nadu ,Vijay ,
× RELATED மதுரவாயல் தொகுதியில் டாஸ்மாக்...