நெல் கொள்முதலை அரசு வேகப்படுத்த அன்புமணி கோரிக்கை

சென்னை: நெல் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.

இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான். காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும் வீணாகி விடும்.

ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: