சிறையில் கொலையுண்ட சிறுவணிகர் சபரிவர்மன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு: விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவில் சாமிதோப்பு பகுதியில் சபரிவர்மன் என்பவர் தனது வாழ்வாதாரத்திற்காக சிறு பெட்டிக்கடை நடத்தி வந்த ஏழை வணிகர். அற்ப காரணத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, சிறைத்துறை காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் எனும் செய்தி நெஞ்சில் அனல்வேல் பாய்ந்ததாக உணர்கிறேன். அவர் ஒரு மாற்றுத்திறனானி. அவர் ஒரு சிறுபெட்டி கடை வணிகர். பள்ளி செல்லும் குழந்தைகளின் தந்தை.

படித்த பணியிலில்லா மனைவியின் ஊன்றுகோல். ஒரு மாநிலத்தில் மதுவிற்பனை, புகையிலைப் பொருட்கள் விற்பனை இவற்றிற்கு தடை. அண்டைமாநிலங்களில் அவற்றிற்கு தடையில்லை. தடையில்லா மாநிலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட மாநிலத்தில் விற்பனைக்கு கொண்டு வரும்போது கிரிமினல் குற்றம். அதனால் பாதிக்கப்படுவது விழிப்புணர்வு இல்லா அடித்தட்டு சிறுகுறு வணிகர்கள்தான். சபரிவர்மன் சிறைக்கொலை சம்பவத்திற்கு தமிழகஅரசு குடும்ப இழப்பீட்டுதொகையாக 1 கோடி ரூபாய் அறிவித்திடவும், படித்து பட்டம்பெற்ற அவரது மனைவிக்கு அரசுத்துறையில் தகுதியான வேலை வழங்க வேண்டும்.

காவல்துறை அத்துமீறலால் சட்டத்திற்கு விரோதமாக உயிரழப்புக்கு உள்ளானாலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசுக்கு எதிராக எதிர்வினையாற்றும் நிலை உருவாகும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு பதிவுசெய்து அரசு உச்சகட்ட கவனத்துடன் அதிகாரிகளைக் கையாளவேண்டுமென்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வேண்டுகிறேன். மொத்தத்தில் நாடு முழுவதும் ஒரேசட்ட நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டுமென்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Stories: