×

குன்னூர் பேருந்து நிலைய கழிப்பறையில் தண்ணீர் தட்டுப்பாடு

குன்னூர், ஜூலை 14: நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கியப் பகுதியாக குன்னூர் பேருந்து நிலையமும் அதன் அருகிலுள்ள மார்க்கெட் பகுதியும் விளங்குகின்றன. அப்பகுதிகளுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், குன்னூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பாக நவீன கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிப்பறைக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, இந்த கழிப்பிடம் தற்காலிகமாக பூட்டி மூடப்பட்டது. பேருந்து நிலைய கழிப்பறை திடீரென பூட்டப்பட்டதால், அங்கு வரும் பொதுமக்கள், பயணிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். இப்பிரச்னை காரணமாக நேற்று காலை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக குன்னூர் நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சியிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் பொதுமக்களின் அவதியைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மற்றொரு பகுதியில் இருந்து வாகனத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கழிப்பறையில் இறக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகராட்சிக்குச் சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தினமும் பேருந்து நிலைய கழிப்பறைகளுக்கும், பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நகராட்சியிடம் உள்ள இரண்டு தண்ணீர் விநியோக வாகனங்களும் பழுதடைந்து முடங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாகவே இதுபோன்ற தொடர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது’’ என்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக பழுதடைந்த தண்ணீர் வாகனங்களை பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், பேருந்து நிலைய கழிப்பறைக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor ,Nilgiris district ,
× RELATED பரம்பிக்குளம் வனப்பகுதியில்...