×

பந்தலூரில் கல்விக்கடன் வழங்க இழுத்தடிப்பு: மாணவர் வங்கி கிளை முன்பாக குடும்பத்துடன் போராட்டம்

பந்தலூர், ஜூலை 14: பந்தலூரில் கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்த வங்கி கிளை முன்பாக மாணவன் குடும்பத்துடன் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் காலனி சாலை பகுதியில் வசித்து வருபவர் டேக்சி டிரைவர் அபுதாஹிர். இவரது மகன் ஆசிக் தாஹிர். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அபுதாஹிர் மகனுக்கு பந்தலூரில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் (இந்தியன் வங்கி) கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது, கடன் தருவதாக கூறிய வங்கி கிளை அவருக்கு கடன் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது. இதனால், குறித்த நேரத்தில் கல்வி கட்டணம் செழுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிக் தாஹிர் குடும்பத்துடன் நேற்று காலை வங்கி கிளை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். தகுதி இருந்தும் கல்விக்கடன் வழங்காத வங்கி நிர்வாகத்தை கண்டிப்பதாகவும், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதே என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் எஸ்ஐ கருப்புசாமி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் ஹர்ஷவர்த்தன், உதவி மேலாளர் வினித்குமார் ஆகியோருடன் பேசி உடனடியாக ரூ.4.77 லட்சம் கல்விக்கடன் வழங்குவதற்கான உத்தரவு கடிதத்தை வழங்கினர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Pandalur ,Abu Dahir ,Colony Road ,Nilgiris district ,Asiq… ,
× RELATED பரம்பிக்குளம் வனப்பகுதியில்...