கோவை மாவட்டத்தில், கடந்தாண்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 1,182 பேர் பயன்

கோவை, ஜூலை 14: கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 1,182 குழந்தைகள் பயன் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெற்றோருக்கு 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் அந்த பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. ஆண் குழந்தை இருக்க கூடாது. இதன்படி, ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50 ஆயிரமும், 2 பெண் குழந்தை என்றால் தலா ரூ.25 ஆயிரமும் வைப்பு நிதியாக செலுத்தப்படும். இதன் பின்னர் அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவு பெற்றதும் முதிர்வு தொகையானது வழங்கப்படுகிறது. இது ஏழை குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நிதி அதிகாரம் வழங்குவதையும், அவர்களின் ஆரம்ப கால கல்வியை உறுதி செய்வதையும் இந்த திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,182 பெண் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தப்படும். 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகையாக தலா ரூ.25 ஆயிரம் செலுத்தப்படும். இந்த வைப்பு தொகையானது தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 1,182 குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வைப்புத்தொகை செலுத்தப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் ரசீது வழங்கப்பட்டு உள்ளது. அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் இந்த தொகை வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். மேலும் இந்த தொகையை பெற அந்த பெண் குழந்தை 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
மேலும் குழந்தைகளின் பெற்றோர்களின் யாராவது ஒருவர் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளவர்கள் அல்லது 2 பெண் குழந்தை உள்ளவர்கள் இந்த நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். முதல் குழந்தைக்கு 12 வயது வரையும், 2-வது குழந்தைக்கு 3 வயது வரையும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: