திருமலை: மனைவி, 2 மகன்கள், சிறுமி மற்றும் தாய் உட்பட 6 பேரை கொலை செய்த சைக்கோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஷாபாத் மண்டலம், தைவாலகுடாவை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதில் 2வது மகன் ராஜ்குமார்(28), இவர் அதே பகுதியை சேர்ந்த சரிதா என்பவரை, கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, ஷாபாத்தில் குடியேறி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு பரீட்சித்(4), தைவிக்சித்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு இவரின் வீட்டின் பக்கத்தில் இருந்த லட்சுமி(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரது 17 வயது மகளை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து, கடந்த மே மாதம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜ்குமார் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், ராஜ்குமார் முன் ஜாமீன் பெற்று இருந்தார். இதையடுத்து ராஜ்குமார் தனது குடும்பத்தை ஷாபாத்தில் இருந்து காலி செய்து, தனது சொந்த கிராமமான தைவலகுடாவில் வசித்து வந்தார். மேலும், தனக்கு எதிராக தொடரப்பட்ட போக்சோ வழக்கிற்கு காரணமான, சிறுமியின் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து கடந்த 10ம் தேதி இரவு 11 மணிக்கு, சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது தாய் லட்சுமி, பாட்டி ருக்கம்மா, ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, சிறுமியை இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது சிறுமி கூச்சலிடவே அவரையும், கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர், தனது வீட்டிற்கு வந்து நடந்த விவரங்களை சரிதாவிடம் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டதில், ராஜ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் சரிதாவையும் குத்தி கொலை செய்தார். பின்னர், தனது இரண்டு மகன்களையும் கொலை செய்துவிட்டு, தனது பெற்றோருக்கு நடந்த விவரங்களை தெரிவித்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துவிட்டு, அங்கிருந்து தலைமறைவானர்.
இதுகுறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜ்குமார் குறித்து, தகவல் தெரிவித்தால், ரூ.2 லட்சம் பரிசு தொகை அளிப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று கோத்தூர் அருகே சாலையோரத்தில், ஒருவர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ராஜ்குமார் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
