சேலம், ஜூலை 8: சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சேலம் கோரிமேட்டில் உள்ள டாஸ்மாக் கடை மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக சின்னதிருப்பதியை சேர்ந்த யாசின்(30), என்ஜிஜிஓ காலனியை சேர்ந்த நவீன்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கடையில் மதுவாங்க வந்தபோது, டூவீலரை ரோட்டில் நிறுத்தினர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் வண்டியை பறிமுதல் செய்தனர். இதனால் கோபம் அடைந்த யாசின், நவீன் மற்றும் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களின் முக்கிய கூட்டாளிகளான ரவுடிகள் ஜெகதீஸ்வரன், தம்புடு ஆகியோரை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் கைதான யாசின், நவீன் ஆகியோர் நேற்றுமுன்தினம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் பிறப்பித்தார். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் ஜெகதீஸ்வரன், தம்புடு ஆகியோரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
