×

சேலம் மாவட்டத்தில் 5 மாதத்தில் 1,874 பேரின் டிரைவிங் : லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து அதிகாரிகள் தகவல்

 

சேலம், ஜூலை 6: சேலம் மாவட்டத்தில், கடந்த 5 மாதத்தில் சாலை விதிகளை மீறிய 1,874 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ெதரிவித்தனர். தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களே வாகனம் ஓட்ட தகுதியுள்ளவர்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை வீட்டில் உள்ளவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், டூவீலர்கள் மற்றும் கார்களில் பறப்பது அதிகரித்துள்ளது. சிறுவர்கள் பைக்கில் 2 அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு போக்குவரத்து நிறைந்த சாலைகளில் கூட மின்னல் வேகத்தில் சாகச பயணம் செய்கின்றனர். இவர்கள் எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்துவதில்லை. எந்த இடத்திலும் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதும் இல்லை. இதுபோன்ற சிறுவர்களால், சாலையில் விதிமுறைகளை கடைபிடித்து குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், கூடுதலாக சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாகனத்தை இயக்கும் போது சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. சேலத்தை பொருத்தமட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குகின்றனர். அவர்களின் முழு கவனமும் செல்போன் உரையாடலில் இருப்பதால் எதிர், பக்கத்தில் வரும் வாகனங்களை கண்டுக்கொள்ளாமல் வாகனத்தை திருப்பும் போது விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இவர்களால் சரியான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் நடத்தப்பட்டது. இதில் தொடர் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதே போல், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம், கடந்த ஜனவரி முதல் மே வரை அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிக ஆட்களை வண்டியில் ஏற்றி செல்லுதல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 1,874 நபர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் மே மாதத்தில் மட்டும் 265 நபர்களின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில், சாலை பாதுகாப்பு குறித்துத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவிலான பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதிகாரிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Tags : Salem district ,Salem ,Tamil Nadu.… ,
× RELATED டாஸ்மாக் மீது பெட்ரோல்...