×

சிரமத்தில் தத்தளிக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள்; நரசிங்கபுரம் நகராட்சியில் பஸ் நிறுத்தம்: நிழற்கூடங்கள் அமைத்து தர வேண்டும்; தொடரும் மக்கள் கோரிக்கை நிறைவேறுமா?

 

நரசிங்கபுரம், ஜூலை 3: சேலம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் பஸ்நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். போக்குவரத்து துறை இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சிகளில் ஒன்றாக இருப்பது நரசிங்கபுரம் நகராட்சி. 18 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். சேலம்-சென்னை பிரதான வழித்தடத்தில் இருக்கும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதி என்பது எப்போதும் மக்கள் நெருக்கம் மிகுந்த இடமாகவே காணப்படுகிறது.

நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சேலம்-கடலூர் மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், வாழப்பாடி, நாமக்கல், ராசிபுரம், மல்லிகரை, தம்மம்பட்டி, கருத்தராஜபாளையம், கோபாலபுரம், காக்கிச்செட்டிப்பாளையம் பழனியாபுரி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, நரசிங்கபுரம் வழியாக தினமும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் ஆலமரம் பஸ் ஸ்டாப் மற்றும் நரசிங்கபுரம் பஸ் ஸ்டாப் ஆகிய மூன்று இடங்களில் மக்கள் ஒதுங்கி நிற்பதற்கான நிழற்கூடம் எதுவுமில்லை.

பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதற்கான அதிகாரப்பூர்வ பஸ்நிறுத்தங்களும் இல்லை. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு செல்வோர் என்று அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தின் முக்கிய நகராட்சியாக ஆத்தூர் உள்ளது. அதற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் மற்றொரு நகராட்சி நரசிங்கபுரம். இங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளன. இது மட்டுமன்றி நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம், மாணவ-மாணவிகள் தங்கும் விடுதி, அம்மா உணவகம் என்று பிரதான கட்டிடங்கள் ஏராளமாக உள்ளது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக நரசிங்கபுரம் உள்ளது.

ஆத்தூர் மற்றும் சேலத்தில் இருந்து நரசிங்கபுரம் சுற்றுப்புறங்களுக்கு செல்வதற்கும் கிராம மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்த வகையில் இப்பகுதியில் தினமும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிநிமித்தங்களுக்கு குவிகின்றனர். ஆனால் நிழற்குடையோ, உரிய பஸ்நிறுத்தமோ இல்லாததால் பஸ்களை நிறுத்தாமலேயே சென்று விடுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்து வருகின்றனர். கடும் வெயிலாக இருந்தாலும், கொட்டு மழையானாலும் நடுரோட்டிலேயே காத்து நிற்க வேண்டிய சூழல் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பொதுமக்கள் அதிகம் திரளும் விநாயகபுரம் பஸ்ஸ்டாப், ஆலமரம் பஸ் ஸ்டாப் மற்றும் நரசிங்கபுரம் பஸ் ஸ்டாப் போன்ற இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். நரசிங்கபுரத்தில் பஸ்நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். இதற்கு சேலம் மாவட்டத்ைத சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags : Narasinghapuram Municipality ,Narasinghapuram ,Salem ,Transport Department ,
× RELATED பள்ளிகளில் ஆய்வு ரீல்ஸ் போட்டு சர்ச்சையை கிளப்பிய தவெக நிர்வாகிகள்