புதுடெல்லி: கரூர் விவகாரத்தில் நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி சிபி அலுவலகத்தில் இயக்குனருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வழங்கியுள்ளார். அதில், ‘‘கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐயின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த இரண்டாம் தேதி சில கருத்துக்களை பேசியுள்ளார். எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாகஅரசின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களையும் நியமன ஆணைகளையும் வழங்க முதலமைச்சர் வரும் பத்தாம் தேதி கரூர் செல்ல உள்ளார். எனவே அவரது பயணத்தை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று கரூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கமிட்டிக்கும் ஒரு புகார் கடிதத்தை ஆர் எஸ் பாரதி அனுப்பி வைத்துள்ளார்.
அதில், ‘‘கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ.யின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளார். அமைச்சரின் பேச்சு சாட்சிகளை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் சி.பி.ஐ.யின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் விகாரத்தில் அப்போதைய முதலமைச்சரான ஸ்டாலின் மீதும், காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில் பேசி வழக்கின் விசாரணைக்கு இடையூறு விளைவித்து வருகிறார்.
எனவே சாட்சிகளை பாதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் முறையை கண்காணிக்க வேண்டும். கரூர் உயிரிழப்பு வழக்கில் முக்கிய சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து சிபிஐக்கு மேற்பார்வை குழுவானது உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.
