×

குன்னூர் அருகே குடியிருப்பில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

குன்னூர்: குன்னூர் அருகே குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகள் மற்றும் மலையோர கிராமங்களில் குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பல்வேறு வகையான குரங்குகள் இருந்தாலும், பரவலாக காணப்படும் நாட்டு குரங்குகளே மக்களுக்கு அதிக தொல்லையை ஏற்படுத்தி வருகின்றன.

காடுகள், மலையோர பாதைகளிலும் மட்டுமே சுற்றித் திரிந்த குரங்குகள், தற்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக குடியிருப்பு பகுதியில் கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளன. ​குறிப்பாக, குன்னூர் டார்லிங்டன் பிரிட்ஜ் மற்றும் அம்பேத்கார் நகர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். ​

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
‘‘வீடுகளுக்கு வெளியே துவைத்து காயப்போடும் துணிகளை குரங்குகள் கடித்து கிழித்து விடுகின்றன.​ வீட்டின் கதவு அல்லது ஜன்னல்கள் சற்று திறந்திருந்தாலும், உள்ளே புகுந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்களை சூறையாடி விடுகிறது. தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகளிடம் குரங்குகள் சேட்டை செய்து மிரட்டுவதுடன், சில பகுதிகளில் தனியாக இருக்கும் முதியவர்களையும் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

குரங்குகளின் இந்தத் தொடர் சேட்டைகளால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், குழந்தைகளை தனியாக வெளியே அனுப்பவும் அச்சமடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்’’ என்றனர்.

Tags : Coonoor ,Western Ghats ,Tamil Nadu ,
× RELATED அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100%...