சென்னை: கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி துரைமுருகனின் வெற்றியை செல்லாது எனவும், தன்னை வெற்றிபெற்றவராகவும் அறிவிக்கவும் கோரி அதிமுக வேட்பாளர் வி.ராமு 2021ல் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். துரைமுருகன் தரப்பில், 16து சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து 17 சட்டமன்றம் அமைந்துவிட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அதிமுக வேட்பாளர் ராமு தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்று துரைமுருகனுக்கு எதிரான தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
