நியூயார்க்: 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் ரவுன்ட் ஆப் 32 சுற்று முடிந்து, கால்இறுதிக்கு முந்தையரவுன்ட் ஆப் 16 சுற்று நேற்று தொடங்கியது. இதில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் -பராகுவே மோதின. ஆரம்பம் முதலே பிரான்ஸ் பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்தாலும், பராகுவேவின் பலமான தற்காப்பு அரணை உடைக்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை.
2வது பாதியில் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பிரான்ஸ் மாற்று ஆட்டக்காரர் டெசிரே டூயேவை, பராகுவே பாக்ஸ் நடுவே தட்டிவிடப்பட்டார். இதை நடுவர் முதலில் மறுத்தாலும், வீடியோ உதவி நடுவர் பரிசீலனைக்குப் பின் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே துல்லியமாக கோலாக மாற்றினார். பராகுவே கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் 1-0 என பிரான்ஸ் வெற்றிபெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. ஆட்டம் முடிந்த பிறகும் பராகுவேயின் கஸ்டாவோ வெலாஸ்குவெஸ், பிரான்ஸ் வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கால்இறுதியில்வரும் வரும் 9ம் தேதி மொராக்கோவுடன் பிரான்ஸ் மோத உள்ளது.
