×

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு இ-டிஸ்ட்ரிக்ட் இணையதளம் முடங்கியது: மாணவர்கள், பெற்றவர்கள் அவதி

 

செங்கல்பட்டு: நாடு முழுவதும் எம்பிபிஎஸ் அனுமதிக்கான நீட் நுழைவு தேர்வு நிறைவுற்ற நிலையில் அதற்கான அனுமதி விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க மாணவர்களுடைய ஜாதி சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்நிலையில் ஜாதி சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கும் இணையதளம் நேற்று செங்கல்பட்டில் பல்வேறு காரணங்களுக்காக முடங்கியது. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் ஜாதி சான்றிதழை அரசின் இ- டிஸ்ட்ரிக்ட் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த இணையதளம் நேற்று முதல் வேலை செய்யவில்லை. இதனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஜாதி சான்றிதழை பெற என்ன செய்வது என்று தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இது சம்பந்தமாக மாவட்ட விஏஓ மற்றும் ஆர்ஐ ஆகியோரை நேரில் சந்திக்க சென்றால் எங்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளார்கள், ஆகையால் புதிதாக பதவி ஏற்க வருபவர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறார்கள். இந்த இணையதளத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான சாதி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் தேங்கியுள்ளதாக நிர்வாக அலுவலர் கூறினார். இதனால் மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் இணையதளம் வாயிலாக எம்பிபிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அரசு இம்மாதிரியான இக்கட்டான தருணங்களில் முன்னேற்பாடுகளை செய்ய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்போது இருக்கும் நடைமுறையில் ஜாதி சான்றிதழ் ஒரு வருடத்தில் காலாவதியாகிறது. இந்த விதியை தளர்த்தி ஜாதி சான்றிதழை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறையை ஏற்படுத்தித் தருமாறு அரசை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். இது குறித்து செங்கல்பட்டு கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,e-District ,Chengalpattu ,NEET ,MBBS ,Tamil Nadu government ,
× RELATED சென்ட்ரல், மீனம்பாக்கம் மெட்ரோ ரயில்...