×

திருவள்ளூரில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் பள்ளி மாணவிகள்: வேகத்தடை அமைக்கவும், போலீசாரை பணியில் அமர்த்தவும் கோரிக்கை

 

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவிகள் சாலையை கடக்கும்போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ – மாணவிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகள் பள்ளி பேருந்தில் செல்கின்றனர்.

இந்நிலையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே வி.எம். நகர் பகுதியில் இருக்கும் ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், மணவாளநகர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், கீழ் நல்லாத்தூர், ஈக்காடு, புல்லரம்பாக்கம், பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். இவ்வாறு அரசு மற்றும் தனியார் பேருந்தில் வரும் மாணவிகள், திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் தலைமை தபால் நிலையம் அருகே இறங்கி சாலையை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றது.

இதனால் சாலையை கடக்கும் மாணவிகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் செயல்படும் பகுதியில் வேகத்தடை அமைத்திருக்கின்றனர். இதனால், வேகமாக வரும் வாகனங்கள் நின்று செல்வதால் மாணவ – மாணவிகள் எளிதில் சாலையை கடந்து சென்று விடுகின்றனர். ஆனால், கால்நடை மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லாததால் சாலையை கடக்கும்போது மாணவிகள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் சாலையின் இரு புறத்திலும் வேகத்தடை அமைத்து, காலை பள்ளிக்கு செல்லும் போதும், மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் போக்குவரத்து காவலரை பணியில் அமர்த்தி விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvallur ,
× RELATED சென்ட்ரல், மீனம்பாக்கம் மெட்ரோ ரயில்...