×

நெல்லை – சென்னை இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நெல்லை – சென்னை எழும்பூர் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு பயணச்சீட்டுகள் விரைவில் விற்றுத் தீர்ந்துவிடுவதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது.

விடுமுறை நாள்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், நெல்லை – சென்னை எழும்பூர் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும். திருநெல்வேலியில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 10.45 மணிக்கு வந்தடையும்.

அதேபோல, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் நள்ளிரவு 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Nellai ,Chennai ,Southern Railway ,Chennai Egmore ,South Tamil Nadu ,
× RELATED அணுக்கனிம சுரங்கத் திட்டம்:...