×

ஆளுநர் அர்லேகருக்கு வைகை மீது திடீர் அக்கறை ஏன்?: கி. வீரமணி கேள்வி

சென்னை: ஆளுநர் அர்லேகருக்கு வைகை மீது திடீர் அக்கறை ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில், தன்னுடைய ஆட்சி நடக்கிறது என்ற மாயையில் இருக்கிறாரா ஆளுநர்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டினுடைய பொறுப்பு ஆளுநரான அர்லேகர் அவர்கள் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘வைகை நதியை மீட்கும் பொறுப்பை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும். யாரும் முன்னெடுக்கவில்லையானால் ​லோக் பவன் தலைமை தாங்கி, (அதாவது பழைய ராஜ் பவன் – ஆளுநர் இல்லம்) முன்னின்று நடத்தும்’’ என்று அவர் கூறியிருப்பது, ​ஆழம் பார்க்கக்கூடிய ஒரு வேலை.

அவருக்குத் திடீரென்று வைகையின் மீது என்ன அவ்வளவு பெரிய அக்கறை வரவேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை. அப்படியே வந்தாலும் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

ஒன்றிய அரசுக்குச் சொல்லி ஏராளமான நிதியை ஒதுக்கித் தாருங்கள். அதன் மூலமாகச் செய்யலாம் என்று சொல்லியிருக்கலாம். அல்லது அந்த மதுரையின் மீது அக்கறை இருந்தால், பக்கத்திலேயே இருக்கக்கூடிய, நீண்ட நாளாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி (எய்ம்ஸ்) இருக்கிறது அல்லவா, அந்த மருத்துவக் கல்லூரியை விரைந்து கட்டச் சொல்லி இருக்கலாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சுட்டிக்காட்டி இருப்பதன்மூலம் தன்னுடைய ஆட்சி நடக்கிறது என்ற மாயையில் இருக்கிறாரா?

​அல்லது இப்படிச் சொன்னால் உடனடியாக மற்றவர்களும் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று கருதுகிறாரா? என்று புரியவில்லை. என்ன இருந்தாலும் இந்த ஆட்சி, உடனடியாக இதில் எவ்வளவு விழிப்போடு இருக்கிறார்களோ, அதே போலத்தான் மற்ற பிரச்சினைகளிலும் விழிப்போடு இருக்க வேண்டும். உறவுக்குக் கை கொடுப்பது என்ற சாக்கில் உரிமைகளைப் பலி கொடுக்கக் கூடாது.

பலி கொடுக்கக்கூடிய வாய்ப்பு வரும் என்று கருதி, அவர்கள் ஒத்திகை பார்க்கும் நேரத்தில், எப்போதும் தமிழ்நாடு அரசு இதில் விழிப்போடு இருக்க வேண்டும்! என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Governor ,Arleker ,Q. Veeramani ,Chennai ,Arlaker ,Dravidar Corporation ,Ki. Veeramani ,Tamil Nadu ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு...