சென்னை: தவெகவில் புதிதாக 5 கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 4 எம்எல்ஏகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் உட்கட்சி பூசலை சரிசெய்ய ஏற்கனவே 132 கட்சி மாவட்டங்கள் உள்ள நிலையில், அவற்றை மேலும் அதிகரிக்கக் கட்சித் தலைமைதிட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் 234 தொகுதிகளையும் 234 கட்சி மாவட்டமாகப் பிரித்து, அதை அதிருப்தியில் உள்ளவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சரிகட்ட திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம் தவெக கட்சி மாவட்டம் 137ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த 5 கட்சி மாவட்டங்களுக்கும் செயலாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் முனிரத்தனம், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம் ரெட்டியார்பட்டி நாராயணன், திருநெல்வேலி மத்திய மாவட்டம் மரிய ஜான், திருநெல்வேலி வடக்கு மாவட்டம் ஆர்.எஸ்.முருகன், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் அபிஷேக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள்.
இந்த நால்வரும் தேர்தலுக்கு முன்பு மாற்றுக் கட்சியில் இருந்து வந்து தவெகவில் இணைந்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாகப் புதிய கட்சி மாவட்டங்களை உருவாக்கி, அதை அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்து உள்கட்சிப் பூசலை சரிகட்ட தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
