×

சேலத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்து கேட்பு 3 அமைச்சர்கள் முன்னிலையில் விவசாயிகள் கடும் வாக்குவாதம்: தேர்தல் அறிக்கைப்படி பயிர்க்கடன் முழுதும் ரத்து செய்ய வலியுறுத்தல்

சேலம்: முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என 3 அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் 10 மாவட்ட விவசாயிகள் ஆவேசமாக கூறினர். தமிழ்நாடு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்த விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தலைமை வகித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் விஜய்பாலாஜி முன்னிலை வகித்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி எவ்வித நிபந்தனையுமின்றி விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள் வீதியில் இறங்கி அறப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும்.வேளாண்துறை 2.0 திட்டத்தை செயல்படுத்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையை இணைத்து திட்டங்களை கொண்டு வர வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.

கள்ளை அரசே கொள்முதல் செய்து, டாஸ்மாக் மூலம் விற்க வேண்டும் என வலியுறுத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விவசாயிகளின் ரூ.18 ஆயிரம் கோடி பயிர்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் கூட்டுறவு, தேசியமயம், தனியார் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.35 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார்கள்,’’ என்றார்.

* அதிகாரிகள் கட்டுப்பாடு
கூட்டம் துவங்குவதற்கு முன்பு, கூட்டரங்கில் 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் வேளாண் அதிகாரிகள் வந்து, ஒரு சிலருக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க அனுமதி வழங்கப்படும். அதன்படி கருத்து தெரிவியுங்கள் என்று கட்டுப்பாடு விதித்தனர். இதற்கு விவசாயிகள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் எழுந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags : Agricultural ,Salem ,Chief Minister ,Vijay ,Tamil Nadu Agriculture… ,
× RELATED தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்