×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.177 குறைப்பு: வீட்டு சிலிண்டர் விலை மாற்றமில்லை: இல்லத்தரசிகள் ஏமாற்றம்

சேலம்: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.172.50 முதல் ரூ.177 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் இல்லத்தரசிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் 1ம் தேதி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.990 முதல் ரூ.1000 வரை அதிகரித்தது. இந்த அதிரடியான விலை உயர்வு நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மாதம் 7ம் தேதி ரூ.29 உயர்ந்தது. அதன்படி டெல்லியில் ரூ.942, மும்பையில் ரூ.941.50, கொல்கத்தாவில் ரூ.968, சென்னையில் ரூ.957.50, சேலத்தில் ரூ.975.50 என விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஜூலை) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு நேற்று அதிகாலை வெளியிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.172.50 முதல் ரூ.177 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் சென்னையில் ரூ.3,283.50 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.177 குறைந்து ரூ.3,106.50 ஆகவும், சேலத்தில் ரூ.3,230.50 ஆக இருந்தது ரூ.177 குறைந்து ரூ.3,053.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் ரூ.2936.50, கொல்கத்தாவில் ரூ.3,078.50, மும்பையில் ரூ.2,890, பெங்களூரில் ரூ.3,026 ஆக குறைந்துள்ளது.

ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. இதனால் வீட்டுசிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலை குறைக்கப்படாததால் இல்லத்தரசிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

* பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?
ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது இருநாடுகள் இடையே போர் ஒப்பந்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 73 டாலராக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வரும் உயர் மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க தூதர்களுடன் நேரடியாகப் பேச ஈரான் மறுத்துள்ளதால் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதன் காரணமாகவே விலை குறைக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* 200 லிட்டர் கட்டுப்பாடு நீக்கம்
மேற்கு ஆசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாக சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கடந்த ஜூன் 12ம் தேதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் சீரடைந்ததை தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Salem ,
× RELATED முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின்...