சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையின் உள்கட்டமைப்பு மற்றும் அன்றாட நிர்வாகத்தைத் தாங்கி நிற்கும் சென்னை மாநகராட்சி, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை தாண்டிய நிலையில், தற்போது ஒட்டுமொத்த நிலுவைத் தொகை ரூ.4,000 கோடியாக அதிகரித்து, நடப்பு பணிகளையே முடக்கும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாக துறையின் கீழ் இயங்கும் மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள இந்த நிதி முடக்கம், தற்போது தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜயின் பொறுப்பில் உள்ளது. இந்த நெருக்கடி ஒப்பந்ததாரர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை முழுவதும் புதிய தார்ச் சாலைகள், மழைநீர் வடிகால்வாய்கள், மேம்பாலங்கள், தெருவிளக்குகள் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, இந்த பணிகளை செய்து முடித்த 40க்கும் மேற்பட்ட முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.2000 கோடி நிலுவைத் தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர் சம்பளம், மூலப்பொருள் கடன் ஆகியவற்றை அடைக்க முடியாமல் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானார்கள். பழைய நிலுவைகள் தீர்க்கப்படாத நிலையில், தற்போது சமர்ப்பிக்கப்பட்ட பில்கள், தயாரிக்கப்பட்டு வரும் பில்கள், நடப்பு பணிகளுக்கான தொகை என மொத்த நிலுவை ரூ.4,000 கோடியை எட்டியுள்ளது.
இது சென்னையின் வளர்ச்சியையே முடக்கும் பேராபத்தாக மாறியுள்ளது. சென்னையின் பல்வேறு வார்டுகளில் தார்ச் சாலை, உட்புற சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் இணைப்பு, பாலங்கள் கட்டும் பணிகள் அரைகுறையாக நடைபெற்று வருகின்றன. கடந்த கால பணிகளுக்கான பணமே வராததால், தற்போதைய பணிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி, தார் போன்ற மூலப்பொருட்களை வாங்க அவர்களிடம் பணப்புழக்கம் இல்லை.
கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தினக்கூலி மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு வாராந்திர சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. கையில் நிதி இல்லாததால், பல இடங்களில் ஒப்பந்ததாரர்கள் பணிகளை பாதியிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். ஒருபுறம் நடப்பு பணிகளுக்கான காலக்கெடு நெருங்குவதால், மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களை வற்புறுத்துகின்றனர்.
மறுபுறம், பழைய பாக்கியை கொடுத்தால்தான் புதிய பணிகளை தொடர முடியும் என்று ஒப்பந்ததாரர்கள் கைவிரிக்கின்றனர். வங்கிகளிலும், தனியாரிடமும் வாங்கிய கடன்களுக்கான வட்டி நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பல ஒப்பந்த நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன. குறிப்பாக சென்னையின் பல வார்டுகளில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே கிடக்கின்றன. வடகிழக்குப் பருவமழை நெருங்கும் வேளையில், மழைநீர் வடிகால் பணிகள் பாதியில் நிற்பது பெரும் வெள்ள அபாயத்தை உருவாக்கும்.
அரைகுறையான சாலை பணிகளால் அன்றாட போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுமட்டுமல்லாமல் ரூ.4,000 கோடி பற்றாக்குறையின் தாக்கம் மாநகராட்சியின் தினசரி நிர்வாகத்தையும் அசைத்துப் பார்க்கிறது. மாநகராட்சியின் சொந்த வருவாய் அனைத்தும் பழைய கடன்களை அடைப்பதற்கே சரியாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள், அலுவலகப் பணியாளர்களின் மாதாந்திர ஊதியமும் வரும் மாதங்களில் தடையின்றி வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை தற்போது முதலமைச்சர் விஜய்யின் நேரடி பொறுப்பில் உள்ள நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசர தேவையாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு, சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால், மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகளுக்கான நிலுவை தொகையை முதலில் விடுவிக்க வேண்டும்.
மாநகராட்சியின் வருவாயை பெருக்கவும், செலவினங்களை முறைப்படுத்தவும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்க வேண்டுமென மாநகாரட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
