×

தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு: குழப்பத்தில் உரிமையாளர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் உரிம காலம் முடிவடைந்ததை அடுத்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் பார்களை (மதுக்கூடங்கள்) மறு உத்தரவு வரும் வரை உடனடியாக மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் மொத்தம் 4,765 மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. இவற்றுள் சுமார் 2,400 கடைகளை ஒட்டி, தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்வதற்காக தனியாருக்கு ‘பார்’ நடத்த உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பார்களுக்கான 2 ஆண்டு உரிம காலம் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைய இருந்தது. எனினும், இடையில் தேர்தல் நடைமுறைகள் குறுக்கிட்டதால் புதிய டெண்டர் கோர முடியாமல் போனது. இதன் காரணமாக, பார்களின் அனுமதி காலம் கடந்த ஜூன் மாதம் வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் நேற்று முன்தினம் (ஜூன் 30ம் தேதி) நிறைவடைந்தது.

புதிய டெண்டர் நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்கள் மூடப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, 2,000க்கும் மேற்பட்ட பார்களின் உரிம காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளதாக நேற்று காலையில்தான் தகவல் வெளியானது. இதன் மூலம் எவ்வித தடையுமின்றி பார்கள் தொடர்ந்து செயல்படும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், மதிய வேளையில் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், உரிமம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் மறுஉத்தரவு வரும்வரை பார்களை உடனடியாக மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் ‘3 மாத நீட்டிப்பு’ என்று தகவல் வெளியான நிலையில், சில மணி நேரங்களிலேயே ‘உடனடியாக மூட வேண்டும்) என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த திடீர் மாற்றத்தால் பார் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் மத்தியில் மிகுந்த குழப்பமும் அதிர்ச்சியும் நிலவி வருகிறது.

Tags : TASMAC ,Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,government ,
× RELATED முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின்...