தோகைமலை, ஜூலை 1: தோகைமலை அருகே தார்சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் குளித்தலை-மணப்பாறை பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இதனால் ஒரு வழிச்சாலையாக இருந்த குளித்தலை-மணப்பாறை பிரதான சாலையானது நாளடைவில் இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் திருச்சி-திண்டுகல் நான்கு வழிச்சாலையில் பல்வேறு வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. இதனால் குளித்தலை-மணப்பாறை பிரதான சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் சாலையாக உள்ளது. இந்நிலையில் குளித்தலை-மணப்பாறை சாலை பழுதாகி குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்ட குளித்தலை-மணப்பாறை பிரதான சாலையானது தற்போது ஆங்காங்கே பழுதாகி காணப்படுகிறது. குளித்தலை-மணப்பாறை பிரதான சாலை பழுதாகி வருவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து சாலையை சீரமைத்து புதிய தார் சாலையாக அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. குளித்தலை-மணப்பாறை பிரதான சாலை பழுதாகி வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். குளித்தலை-மணப்பாறை பிரதான சாலையை நேரில் பார்வையிட்டு புதிய தார்சாலை அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
