×

வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம்; சிட்கோ வளாகத்தில் சுகாதார சீர்கேடால் தொழிலாளர்கள் அவதி தார்சாலை அமைக்க வலியுறுத்தல்

 

கிருஷ்ணகிரி, ஜூன் 30: கிருஷ்ணகிரி சிட்கோ வளாகத்தில், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில், சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1965ம் ஆண்டு தொழிற்பேட்டை (சிட்கோ) தொடங்கப்பட்டது. இங்கு 37 சிறு தொழிற்சாலைகள், 40 குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள சிறு,குறு தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு பூங்கா, தொழிற்சாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொழில் மையத்தின் பொறுப்பாகும். ஆனால், கிருஷ்ணகிரி சிட்கோ வளாகத்தில், கழிவுநீர், குப்பைகள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது நகராட்சியின் வசம் உள்ளது. இந்நிலையில், சிட்கோ வளாகத்தில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடி செல்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பூங்காவில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கூறியதாவது:சிட்கோ வளாகத்திற்குள் நுழைந்து செல்லும் மழைநீர், கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, சாக்கடை நீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குறிப்பாக, கால்வாயின் பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கால்வாய் முழுவதும் தூர்வாரப்படாததால் மண் மேடாக காட்சியளிக்கிறது. கழிவுநீர் முழுவதும் சாலையில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடும், நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், சிட்கோ வளாகத்திற்குள் வரும் தொழிலாளர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளதால், மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் சிட்கோ வளாகத்திற்குள் உள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரி, தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் அகற்றிட வேண்டும். மேலும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடைந்த இடங்களில் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, புதியதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Sitko ,Krishnagiri ,Krishnagiri Sitko ,Estate ,Sitco ,
× RELATED போச்சம்பள்ளி பகுதியில் புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் அவதி