×

தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரி முழுவதும் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்: அகற்ற வலியுறுத்தல்

 

தேன்கனிக்கோட்டை, ஜூலை 3: தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகளால், நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 14வது வார்டில் பட்டாளம்மன் கோயில் அருகே பட்டாளம்மன் ஏரி உள்ளது. தேன்கனிக்கோட்டை நகரின் பகுதியில் உள்ள கழிவுநீர், மழை நீர், அர்தகூர் பகுதியிலிருந்து செல்லும் மழை நீர், பெரிய ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் ஏரிக்கு செல்கிறது. பட்டாளம் ஏரியிலிருந்து பசனத்திற்கு தண்ணீர் திறக்காகதால், கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.

மேலும் நகரின் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும், கழிவு நீர் ஏரியில் கலப்பதால் ஏரி முழுவதும் ஆகாய தாமரை படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் மீன் குத்தகையும் விடாமல் உள்ளனர். ஏரி முழுவதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், ஏரி நீர் முழுவதும் மாசடைந்து காணப்படுகிறது. ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள மக்கள் காலம், காலமாக அந்த ஏரியில் துணி துவைத்து வந்தனர். சில வருடங்களுக்கு முன்பு, அரசு சார்பில் ஏரியில் டோபி காட் அமைத்து தரப்பட்டு, துணி துவைத்து வந்தனர். ஆனால், ஏரியில் ஆகாயதாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளதால், நீர் கருப்பாக மாரி மாசடைந்துள்ளது.

இதனால் ஏரியில் துணி துவைக்க கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏரி முழுவதும் மாசடைந்து காணப்படுவதால், மீன் குத்தகை விடாமல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், ஏரி தண்ணீர் யாருக்கும் பயன்படாதவாறு கருமை நிறமாக மாறி வருகின்றது.
ஒகேனக்கல் குடிநீர் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் உள்ளதால், ஏரியின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, நகர் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதனால் மாசடைந்த நீரை பயன்படுத்தும் போது உடல் அரிப்பு, தோல் நோயால் மக்கள் பாதிப்படைகின்றனர். எனவே ஏரியில் உள்ள ஆகாயதாமரையை அகற்றி, ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி தூர்வாரி, கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattalamman Lake ,Thekkanikottai ,Krishnagiri District ,Thekkanikottai Town Panchayat 14th… ,
× RELATED கருத்தடைக்கு பின் தெருநாய்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்