ராயக்கோட்டை, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் பூக்கள் சாகுபடி பிரதானம். சாமந்தி, செண்டுமல்லி, அரளி மற்றும் பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதை தவிர காய்கறிகள் சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தக்காளி, பீன்ஸ், பாகற்காய், முள்ளங்கி மற்றும் பீர்க்கங்காயை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்கின்றனர். தற்போது, ராயக்கோட்டை பகுதியில், பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளனர். அவை தற்போது, அமோக விளைச்சலை தந்துள்ளது. பொதுவாக நல்ல ஈரப்பதம் உள்ள நிலத்தில், விதை நட்ட 3 மாதங்களில் பீர்க்கங்காய்களை விட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனத்தில் வளரும் நிலையில், அதற்கு குச்சிகள் நட்டு பந்தல் அமைத்தாலே போதும். காய்கள் நன்றாக வளர்ச்சி தரும். தொடர்ந்து 3 மாதங்கள் காய்களை விட்டு பலனளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். அறுவடைக்கு பின், ராயக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில், வியாபாரிகள் கிலோ ரூ.40 வரை மொத்த கொள்முதல் செய்கின்றனர். அதையே சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் விளைச்சலாகும் பீர்கங்காய் தரமானதாகவும், பருமனாகவும் இருப்பதால் சிங்கபூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
