புதுடெல்லி: ராமர் கோயில் காணிக்கை முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அயோத்தி கோயில் காணிக்கைகள் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் கையாடல் அம்பலமானதன் மூலம், தங்களைத்தானே இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிவினைவாத அரசியலுக்காக அயோத்தியைப் பயன்படுத்திய பாஜ, ஆர்எஸ்எஸ் சாதாரண பக்தர்களின் நன்கொடைகளைக் கொள்ளையடித்து, அவர்களின் உணர்வுகளை முற்றிலுமாக கேலிக்குள்ளாக்கியுள்ளது. ஒருபுறம்,கொடூரமான எப்சிஆர்ஏ விதிகள் மூலம் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகளைக் கட்டுப்படுத்த பாஜ விரும்புகிறது. மறுபுறம், ஆர்எஸ்எஸ் போன்ற முற்றிலும் பதிவு செய்யப்படாத அமைப்புகள் நமது நாட்டின் கோயில்களை கொள்ளையடிக்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், கோயில் நிதிக்கு பொறுப்பான அறங்காவலர்கள் எவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. மாபெரும் மோசடியின் உச்சத்தில் இருப்பவர்களைக் குற்றம் சாட்டாமல், கீழ்மட்ட பொறுப்பில் உள்ள ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஒரு சுதந்திரமான விசாரணையின் மூலம் மட்டுமே காணிக்கை கொள்ளையின் முழு அளவையும் கண்டுபிடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
