ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மலையில் புதைந்த நிலையில் ராணுவ மோட்டார் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் உள்ள வரதேசி மலை அடிவார பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 19ம்தேதி மாலை வீட்டின் பின்புறம் உள்ள மலைப்பகுதிக்கு விறகுகளை எடுக்க சென்றார். அப்போது மலையில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் ராக்கெட் போன்ற வடிவில் ஒரு பொருள் கிடந்ததைகண்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து திமிரி போலீசார் அங்கு ஒரு போலீசை பாதுகாப்புக்கு நிறுத்தினர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மலையில் புதைந்து இருப்பது ராணுவ மோட்டார் வெடிகுண்டு என்றும் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். விசாரணையில் ராணுவத்தில், எதிரிகளை முன்னேற விடாமல் தடுப்பதற்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் மோட்டார் வகை வெடிகுண்டு என்பது தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் பயன்படுத்திய குண்டு வெடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் அதை பதுங்கு குழிகளில் மட்டுமே அழிக்க முடியும் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து சென்னையில் உள்ள ராணுவ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ராணுவ அதிகாரிகள் வந்தபிறகு இந்த மோட்டார் குண்டு பாதுகாப்பாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் புனே சென்றுள்ளதால் வரும் 30ம் தேதிதான் வருவார்கள் என்றும், அதன்பிறகே வெடிகுண்டை செயல் இழக்க வைத்து அகற்றப்படும் என கூறிவிட்டு சென்றனர்.
எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டால் வெடிகுண்டு விழும் நிலையில் உள்ளதால் சுற்றிலும் 25க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் நேற்று பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரதேசி மலை அடிவாரத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அங்கு ராணுவ மோட்டார் வெடிகுண்டு இருப்பதை அறிந்து அவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
* 3 கி.மீ தூரம் வரை வெடித்து சிதறும்
வரதேசி மலை ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. மலையில் புதைந்துள்ள ராணுவ மோட்டார் வெடிகுண்டு வெடித்தால் மலை முழுவதும் தரைமட்டம் ஆகிவிடும். மலையை சுற்றி 3 கி.மீ தூரம் வரையுள்ள 10 கிராமங்களும் பாதிக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
