ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடி, மசினகுடி வன சரகத்திற்குட்பட்ட மாயார் அருகே செல்வப்பா காலனியில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் என்பவரின் வீட்டின் வெளியே வளர்ப்பு நாய் நின்றிருந்தது. அப்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை அந்த நாயை வேட்டையாட பாய்ந்து வந்தது. சிறுத்தையை பார்த்ததும் நாய் வீட்டிற்குள் ஓடியது. உடனே சிறுத்தையும் வீட்டிற்குள் புகுந்தது.
அப்போது, வீட்டிற்குள் இருந்த சிவக்குமார் மற்றும் குடும்பத்தினர் சிறுத்தையை பார்த்து அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சமயோசிதமாக வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டினர். வீட்டிற்குள் சிக்கிய சிறுத்தை ஆக்ரோஷமாக உறுமியது. சத்தத்தைக்கேட்டு மற்றவர்களும் வீட்டை விட்டு வெளியில் வந்து விபரம் கேட்டனர். அப்போது சிவக்குமார், வீட்டிற்குள் சிறுத்தை புகுந்துள்ளதை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஜன்னல் வழியாக பார்த்தபோது சிறுத்தை அவர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது. இதை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து மசினகுடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் வந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
கூண்டை வீட்டு வாசலில் வைத்துவிட்டு கதவை மெதுவாக திறந்தனர். அப்போது, சிறுத்தை பாய்ந்து வெளியில் செல்ல முயன்றபோது கூண்டிற்குள் சிக்கியது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து, வனத்துறை வாகனத்தில் பிடிபட்ட சிறுத்தையை ஏற்றி சீகூர் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
