×

திமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் மின்வாரியத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் விஜய் வழங்கினார்

சென்னை: கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மின் வாரியத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சில் வழங்கினார். விழாவுக்கு வந்த முதல்வரை, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தேர்வு செய்யப்பட்ட 401 பேரும், கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிபெற்றவர்கள்.

இவர்களில், 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, ‘முதல்வர் விஜய் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மின்சார துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது முக்கியமாக, இந்த துறையில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேல் காலி பணியிடங்கள் உள்ளன.

இதில் 15 ஆயிரம் பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்தோம். உடனடியாக 15 ஆயிரம் பேரை இந்த துறைக்கு நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக இந்த துறை சீரழிந்து கிடக்கிறது. தற்போதுள்ள 4.5 லட்சம் டிரான்ஸ்பார்மர்களில் 25 சதவீதத்துக்கு மேல் 20 ஆண்டுகளுக்கு முன் பழையது.. இப்போது 250 முதல் 300 துணை மின்நிலையம் தேவைப்படுகிறது.

காலி பணியிடங்களுக்கு இந்த ஆண்டே 15 ஆயிரம் பேரை நியமிக்க முடிவு செய்து, தற்போது, 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கியுள்ளார்,’’ என்றார். முன்னதாக, பணி நியமன ஆணை வாங்க அட்சயலட்சுமி என்ற 9 மாத கர்ப்பிணி வந்திருந்ததை முதல்வர் விஜய்யிடம், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இதையடுத்து முதல்வர் விஜய் விழா மேடையில் இருந்து இறங்கி வந்து அந்த பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

* பவர்கட் பண்ணிடாதீங்க ப்ளீஸ்.. அதிகாரி கெஞ்சல்
முதல்வர் விஜய் விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திரபிரபு அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: சென்னை கலைவாணர் அரங்கத்தில் 24ம் தேதி (நேற்று) காலை 10 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 379 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மின்தடை ஏதும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கே மின்சார தடை ஏற்படலாம் என்ற பயத்தில் இப்படி ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது. முதல்வர் விழாவுக்கே இந்த நிலை என்றால், மக்கள் நிலை என்ன என்பதே தற்போதைய கேள்வி.

Tags : Chief Minister ,Vijay ,Electricity Board ,TNPSC ,DMK ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Kalaivanar Arangam ,
× RELATED ‘ஆட்சி மாற்றத்துக்கு அவங்கதான்...