×

பேன்சி எண் பெற தலைமை செயலகத்தில் நீளும் வரிசை அமைச்சரை சந்தித்தால்தான் விண்ணப்பம் பெறப்படுமா? காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் வேதனை

சென்னை: தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கும் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி தனித்துவமான பதிவு எண் ஒதுக்கப்படுகிறது. பொதுவாக இந்த எண்கள் கணினி முறையில் தோராயமாக வழங்கப்படுகின்றன. ஆனால் சிலர் தங்கள் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்களைப் பெற விரும்புகின்றனர். குறிப்பாக 0001, 0007, 0011, 0099, 1111, 9999 போன்ற பேன்சி எண்கள் அல்லது அரசு ஒதுக்கப்பட்ட சிறப்பு எண்கள் என அழைக்கப்படுகின்றன.

இத்தகைய எண்களைப் பெற விரும்பும் வாகன உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளின்படி விண்ணப்பித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பேன்சி எண்ணை பெற்றுக்கொள்ளலாம். எண்ணின் முக்கியத்துவம் மற்றும் வரிசையைப் பொறுத்து ரூ.40 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

ஆனால் தற்போது இந்த பேன்சி எண்களைப் பெறும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சரின் அலுவலகம் முன்பு தினமும் நீண்ட வரிசையில், பல மணி நேரங்கள் காத்திருந்தும் எந்த தெளிவான பதிலும் கிடைப்பதில்லை என வாகன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக வாகன உரியைாளர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணத்தைச் செலுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து விரும்பிய எண்ணை ஒதுக்கிக் கொள்வது வழக்கம். சில நாட்களுக்குள் பேன்சி எண் பெற முடியும். ஆனால், தற்போது பேன்சி எண் பெறுவதற்கான விண்ணப்பங்கள் போக்குவரத்து அமைச்சரிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனால் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகன உரிமையாளர்கள் காலையிலேயே தலைமைச் செயலகம் வந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் காத்திருந்த சிலர் இதுகுறித்து கூறியதாவது: பேன்சி எண் பெறுவதற்காக பல நாட்களாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறோம். காலை முதலே வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அதிலும் அமைச்சரிடம் மட்டுமே விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்கிறார்கள். அமைச்சர் எப்போது வருவார் என்பதற்கான தகவல் யாரிடமும் இல்லை. ஒரு நாள் முழுவதும் காத்திருந்தும் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், எண்ணுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டாலும், எந்த பதிலும் இல்லை. நாங்கள் அரசு கட்டணம் பற்றியே கேட்கிறோம். ஆனால் தெளிவான விளக்கம் கிடைப்பதில்லை. 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்று சொல்கிறார்கள். மீண்டும் சென்றால் அமைச்சர் இல்லை என்கிறார்கள். அடுத்த நாள் சென்றாலும் மீண்டும் காத்திருக்க வேண்டும். எப்போது வர வேண்டும் என்ற தகவலை கூட தருவதில்லை, என்றனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி...