×

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விபரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்குமாறு தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, ஜூன் 5ம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டும் என்று அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் ஜூன் 1ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிபிஎஸ்இ போன்ற ஒன்றிய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்றார். தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கௌதம் ஆஜராகி, தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தொடர முடியும். சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர முடியாது. விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Tags : Madras High Court ,Chennai ,Tamil Nadu State Information Commission ,Tamil Nadu ,
× RELATED பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி...