×

அவையில் இல்லாத ஒருவரை விஜய் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பேசும்போது, கடந்த திமுக ஆட்சி பற்றியும், அக்கட்சியின் தலைவர் பற்றியும் குட்டிக்கதை என்று கூறி கிண்டலாக பேசினார். பேசி முடித்ததும், சைகை மூலம் ஒரு செயலை செய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி பற்றி பேசும்போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அனுமதி கேட்டார். அவரும் சிரித்துக் கொண்டே அனுமதி வழங்கினார்.

முதல்வரின் இந்த நடவடிக்கை பற்றி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவை விதிப்படியும் மரபுப்படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப்பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.

இது தொடர்பாக கடந்த 22ம் தேதி (திங்கள்) சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மொழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே (23ம் தேதி, செவ்வாய்) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாதவர் குறித்து தமிழக முதல்வர் கிண்டலும்,

கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதல்வர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா? தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்து நியாயமா? பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது பேரவை தலைவர் அவர்களே! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vijay ,House ,Former ,Speaker ,Appavu ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Chief Minister ,DMK ,
× RELATED பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி...