புதுச்சேரி: புதுவையில் தேஜ கூட்டணி ஆட்சி 50 நாட்களை கடந்தும் அமைச்சர்களுக்கு முதல்வர் இலாகா ஒதுக்காததால் முதல்வர் ரங்கசாமி மீது பாஜக கடும் கோபத்தில் உள்ளது. புதுவையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி தேஜ கூட்டணி ஆட்சியமைத்தது. ஐந்தாவது முறையாக முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பொறுப்பேற்றனர். ஆனால் அவர்களுக்கு உடனடியாக இலாகா ஒதுக்கப்படவில்லை.
தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவும் இல்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த 17ம் தேதி என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு பாஜகவை சேர்ந்த ஜிஎன்.எஸ் ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களானார்கள். அதன்படி மொத்தமுள்ள 5 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஒதுக்கப்படவில்லை. சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும், மேலும் 3 நியமன எம்எல்ஏக்களில் ஒன்று தர வேண்டுமென பாஜவிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்துகிறார்.
அதே நேரம், முக்கிய இலாகாவை கேட்டு பாஜவும் விடாப்படியாக இருப்பதால், இலாகா ஒதுக்குவதற்கு ரங்கசாமி முன்வரவில்லை. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை, எப்போது ஒதுக்க வேண்டுமென தோன்றுகிறதோ, அப்போது ஒதுக்கப்படும் என ரங்கசாமி கூறுவது பாஜ தலைமைக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அண்டை மாநில முதல்வர்கள் கூட பிரதமரை சந்தித்து பேசினர். ஆனால் தேஜ கூட்டணி முதல்வராக இருந்தும் ரங்கசாமி இன்னும் பிரதமரை சந்திக்கவில்லை.
எப்போது சந்திப்பீர்கள் என கேட்ட பத்திரிகையாளர்களிடம் நன்றி, வணக்கம் எனக்கூறி, சந்திக்கப்போவதில்லை என ரங்கசாமி மறைமுகமாக தெரிவித்தது கூட்டணிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளார். இதன்காரணமாக கடற்கரை சாலையில் நடந்த யோகா திருவிழா, பிஎஸ் பாளையத்தில் நடந்த உழவர் சந்திப்பு விழா, புதிய குற்றவியல் சட்ட கண்காட்சி, பான்சியோனா பிரெஞ்சு பள்ளிதிறப்பு உள்ளிட்ட அரசு விழாக்களில் கவர்னரும், முதல்வரும் ஒன்றாக பங்கேற்கவில்லை.
கவர்னர் பங்கேற்று சென்ற பிறகு, முதல்வர் தனியாக வந்து பங்கேற்று செல்வதும், பாஜவுடன் மோதலை வலுவாக்கியுள்ளது. இலாகா ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜ மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, வீட்டுக்குள் அழைத்து மரியாதையாக பேசாமல், டென்னிஸ் மைதானத்தில் நிற்க வைத்து பேசி அனுப்பிவிட்டார் ரங்கசாமி. ஒரு கட்டத்தில் பாஜ இறங்கி வந்தாலும், ரங்கசாமியின் பிடிவாதப்போக்கு, ஈகோவும் பாஜ தலைமைக்கு டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் முடிவுகள் மே 4 ம் தேதி வெளியானது, இன்றுடன் புதுச்சேரியில் 50 நாட்களை கடந்துவிட்டது. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் அரசு நிர்வாகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் ஸ்தம்பித்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கேட்டபோது, எந்த பணியும் பாதிக்கவில்லை, எல்லாம் சரியாக நடக்கிறது என தெரிவித்ததையும் பாஜ முழுமையாக ரசிக்கவில்லை. இன்று அதிகாரப்பூர்வமாக இலாகா ஒதுக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இலாகா ஒதுக்குவது மேலும் தாமதமாகும் என தெரியவந்துள்ளது.
* வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி சட்டசபை
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வருகின்றனர். அவர்களை நாடி வரும் ஒருசிலரிடம் பேசிவிட்டு வீட்டுக்கு திரும்புகின்றனர். எந்த துறையும் ஒதுக்காததால் அவர்களை எந்த அதிகாரிகளும் பார்ப்பதில்லை. துறைகள் ஒதுக்காததால் பொதுமக்கள், தங்களது துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அனைத்து துறைகளும் வைத்திருக்கும் முதல்வர் ரங்கசாமியை எளிதில் சென்று பார்க்க முடியவில்லை என்பதால் யாரும் சட்டசபைக்கு வருவதில்லை. இதனால் சட்டசபை வெறிச்சோடி கிடக்கிறது.
